என்னாத்த சொல்வேனுங்கோ, கேவலமா தோத்துட்டோங்கோம்னு பாட வச்சிட்டாங்க நம்ம பசங்க. இன்னுமாடா இவனுங்களை நம்புது இந்த ஊருனு நீக்க கேக்கறது தெரியுது. இதை விட கேவலமா தோக்க முடியாது தான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிகிட்டு இருக்குது.
இன்னைக்கு தோத்ததுக்கு முக்கியமான காரணங்கள்னு பார்த்தா முதலாவது, டாஸை ஜெயிச்சு பேட்டிங் எடுத்தது. எந்த காரணத்துக்காக திராவிட் அந்த முடிவை எடுத்தாருன்னு தெரியலை. ஒருவேளை பங்களாதேஷை underestimate பண்ணியிருக்கலாம். சின்ன பசங்க தான, முதல்ல ஆடி நேத்து தென்னாப்பிரிக்கா கலக்கின மாதிரி நாமளும் கலக்கிடலாம்னு நினைச்சாரோ என்னவோ. எந்த பிட்ச்சா இருந்தாலும் முதல்ல கண்டிப்பா ஸ்விங்க் இருக்கும். அதுலயும் மேற்கிந்தியத்தீவுகள் பிட்சுகள்ல கேக்கவே வேணாம். இதுவரைக்கும் நடந்த எல்லா மேட்சுலயும், முதல்ல ஆடின அணிகள் எல்லாரும் தடுமாறி தான் மேலே வந்தாங்க. அப்படி இருக்கறப்ப திராவிட் கொஞ்சம் சுதாரிச்சு பவுலிங் பண்ணியிருக்கலாம். இந்தியாவில இருக்க பிட்சுகள் வேற, அங்க நிலைமை வேற. டாஸ்ல ஜெயிச்ச அயர்லாந்து பாகிஸ்தானை பேட் பண்ண சொல்லி இப்ப் கிட்டத்தட்ட(80%) சூப்பர்8 வரைக்கும் போயிருக்கு.நேத்து 40 ஓவர்ல 353 ரன் அடிச்ச தென்னாப்பிரிக்கா கூட 5 ஓவர்ல 4/1 என்ற நிலைமைல தான் இருந்தாங்க. இது முதல் காரணம்.
அடுத்தது ஷேவாக். எல்லாரும் தான் சொதப்பினாங்க, ஏன் ஷேவாக்கை மட்டும் குறை சொல்லனும்னு கேட்டா அதுக்கான பதில் ... அவரோட ஃபுட்வொர்க், Body Language எதுவுமே கான்ஃபிடண்டா இல்லை. அப்ப்டி இருக்கப்ப நிச்சயமா அவரி எடுத்து ஒரு விக்கெட்டை வேஸ்ட் பண்ணியிருக்ககூடாது. அவர் இன்னைக்கு அவுட்டானத பார்த்த சுத்தமா ஃபார்ம்ல இல்லங்கறது தெரியுது. Rediffல போட்டிருந்த மாதிரி 'International Arena is no place to try and get back your form'. கங்கூலி மாதிரி கொஞ்ச நாளைக்கு லோக்கல் போட்டில ஆடுங்க, நல்ல நிலமைக்கு வாங்க, இந்திய அணியின் கதவுகள் திறந்தே இருக்கும் உங்களுக்கு. நம்ம ஆளுங்க ஒரு விக்கெட் போனா உடனே டிஃபென்ஸிவா ஆட ஆரம்பிச்சுடுவாங்க. அப்படி இருக்கறப்ப ஷேவாக் மாத்ரி ஒருத்தரை முதல்ல இறக்கறது மகா தப்பு.
அடுத்தது 2 விக்கெட்டோ மூனு விக்கெட்டோ போயிடுச்சுன்ன அடுத்த விக்கெட்டை இழக்காம ஆடவேண்டியது முக்கியம் தான். அதுக்காக ரன்னே எடுக்காம விக்கெட்டை மட்டும் காப்பாத்திக்கறது எந்த பயனும் தராது. இன்னைக்கு அது தான் நடந்தது. நிறைய விக்கெட் போயிடுச்சேன்னு ஒரேயடியா டொக்கு போட ஆரம்பிச்சுட்டாங்க. பந்து நல்லா ஸ்விங் ஆனுது, அடிக்கறது கஷ்டம் எல்லாம் சரிதான்னாலும், அடிக்க வேண்டிய சில பந்துகளையும் அடிக்காம வேஸ்ட் பண்ணாங்க. இதே தப்பை தான் மேற்கிந்தியத்தீவுகள் கிட்ட பாகிஸ்தான் பண்ணி தோத்தாங்க. நாமளும் அதையே பண்ணோம். சுழற்பந்து வீச்ச்சை நல்லா ஆடற சச்சின், கங்கூலி, திராவி கூட இன்னைக்கு தினறுனாங்க. கங்கூலி 66 ரன் அடிச்சாலும், எனக்கென்னவோ யுவராஜ் மட்டும் தான் கொஞ்சம் நம்பிக்கயோட ஆடன மாதிரி இருந்தது.
அடுத்தது எந்த ஒரு நேரத்துலயும் அட்டாக்கிங் கேம் ஆடாம டிஃபன்ஸிவ ஆடனது. பங்களாதேஷோட இக்பால் ஆடனது ஒரு உதாரணம். எல்லாரும் அப்படி அடிச்சு ஆடனும்னு சொல்லலை. ஆனா ஒரு பக்கத்துல ஒருததர் நிதானமாவும், இன்னொரு முனைல இன்னொருத்தர் கொஞ்சமாவது ரன்னடிக்கவும் முயற்சி பண்ணியிருக்கனும். கொட்ட கொட்ட குணியற மாதிரி, பயந்து பயந்து ஆட, அவங்களும் உற்சாகமா பந்து வீச ஆரம்பிச்சுட்டங்க. ஒரு ரெண்டு மூனு ஓவர் ரிஸ்க் எடுத்து அடிச்சிருந்தா, பவுலர் வித்தியாசமா முயற்சி பண்றேன்னு எதாவது தப்பு பண்ண ஆரம்பிச்சிருப்பாரு. அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கவேயில்லை. Its a mind gameனு சொல்ற மாதிரி.
அதே மாதிரி இன்னொன்னு, டீம் மேல இருக்கற Pressure. போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முன்னாள் பங்களாதெஷ் வீரர் சொன்னது 'Expectations on India are very big. It will put some pressure on them. whereas there is no such expectation on Bangladesh.They can play freely. Even if they loose this match, they really don't loose anything'. இது முற்றிலும் உண்மை. கோடிக்கணக்கான் ரசிகர்களோட எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய நிலைமைல இருக்கறதால Pressure அதிகம். அதுவுமில்லாம, தோத்தா வீட்டில கல்லடிக்கறதும், ஜெயிச்சா மறுநாளே மலை பேடறதும் இங்கே சகஜம். இதெல்லாம் இன்னைக்கு மோசமா தோத்ததுக்கு காரணங்கள்னு நினைக்கிறேன்.
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். நடப்பவை நல்லதாக நடக்கட்டும். இனி அடுத்து என்ன? இந்தியா அடுத்த சுற்றுக்கு போகுமா? நிச்சயமா போகும்னு சொல்ல முடியாது ஆனா போகறதுக்கு வாய்ப்பிருக்கு. அடுத்து பெர்முடவோட ஜெயிச்சா இந்தியாவுக்கு 2 புள்ளிகள் கிடைக்கும். புதன்கிழமை நடக்கற மேட்சுலயும் பங்களதேஷ் இலங்கைய தோற்கடிச்சா, வெள்ளிக்கிழமை நடக்கப்போற இந்தியா-இலங்கை போட்டி டிசைடரா ஆயிடும். அதுல ஜெயிக்கற அணி சூப்பர்8க்கு போகும். இலங்கை பங்களாதேஷை தோற்கடிச்சு, இந்தியா இலங்கைய தோற்கடிச்சு, பங்களாதேஷ் பெர்முடாவை தோற்கடிச்சா மூனு டீமும் 4 பாயிண்டோட சமமா இருக்கும். அப்ப நெட் ரன்ரேட்படி அடுத்த சுற்றுக்கு போற அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். ஆக எப்படியும் இந்தியா அடுத்த ரெண்டு போட்டிகளையும் ஜெயிக்கனும், அதுவும் நல்ல முறையில ஜெயிக்கனும். அதாவது முதல்ல ஆடினா 60,70 ரன் வித்தியாசத்தில ஜெயிக்கனும், இரண்டாவதா ஆடி சேஸ் பண்ணா 35,40 ஓவர்ல அடிச்சு ஜெயிக்கனும். இன்னைக்கு பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமை அடுத்த வெள்ளிகிழமை நமக்கு வராம இருக்கனும்னா எல்லாத்தையும் மறந்துட்டு, மிகச் சிறப்பாக ஆடுனால் மட்டுமே முடியும்.
ஒருவேளை இந்தியா அடுத்தடுத்த சுற்றுக்கு போய் கோப்பையவே ஜெயிச்சாலும், இந்த தோல்வியோட தழும்பு ரொம்ப நாளைக்கு எல்லாரோட மன்சுலயும் இருக்கும்.
It's not the end of road INDIA, Come On. YOU CAN STILL DO IT ! !
Saturday, March 17, 2007
கவுத்திட்டீங்களே மக்கா..
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 8:55 PM 51 comments
Labels: இந்தியா, உலகக்கோப்பை, பங்களாதேஷ்
Friday, March 16, 2007
நாளை இந்தியாவின் முதல் போட்டி
கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இந்தியாவோட முதல் உலகக்கோப்பை போட்டி நாளைக்கு நடக்குது. இந்தியாவும் பங்களாதேஷும் ஆடுற இந்தப் போட்டி Port of Spain-ல் உள்ள Queen's Park Oval மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த மைதானம் பற்றிய தகவல்கள் இங்கே.
பங்களாதேஷ் கொஞ்சம் பலவீனமான டீம்னாலும் ஒரேயடியா ஒதுக்கிடவும் முடியாது. பயிற்சி போட்டில நியூசிலாந்தை தோற்கடிச்சு எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினாங்க. அதனால இந்தியா கவனமாகவே விளையாடனும். பங்களாதேஷ்லயும் திறமையான் வீரர்கள் இருக்காங்க. இந்தியாவோட பேட்டிங் தான் பெரிய பலம். இந்தியா முதல்ல விளையாடி ஒரு 300 ரன் எடுத்தா சந்தேகமே இல்லாம வின் பண்ணிடலாம்.
இந்தியாவும் பங்களாதேஷும் இதுவரைக்கும் 14 போட்டில விளையாடி இருக்காங்க. இந்தியா 13 தடவையும் பங்களாதேஷ் 1 தடவையும் ஜெயிச்சிருக்காங்க. உலகக்கோப்பை போட்டிகள்ல மோதறது இது தான் முதல் முறை.
உலகக்கோப்பை போட்டிகள்ல கலக்கும் சச்சின் இந்த உலகக்கோப்பையிலும் நிச்சயமா கலக்குவார். கங்கூலியும் போராடி அணிக்குள்ள வந்திருக்கறதால தன்னோட இடத்தை தக்க வச்சுக்க நல்லா ஆடுவாருன்னு தோனுது. அதே மாதிரி திராவிட், யுவராஜ், டோணி, உத்தப்பா, கார்த்திக்னு நல்ல தரமான பேட்டிங் இருக்குது.
பேட்டிங்ல இப்போதைக்கு இருக்க ஒரே பிரச்னை ஷேவாக். சமீபகாலமா மோசமா விளையாடிட்டு இருந்தாலும், திராவிட் இவர் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காரு. ஷேவாக்குக்கு இன்னும் இரண்டு வாய்ப்பிருக்கு ஃபார்முக்கு வர. பங்களாதேஷோடயும் பெர்முடாவோடயும் அவரை ஆடவிட்டு முயற்சி பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். என்னோட கருத்து, பெர்முடா கிட்ட மட்டும் ட்ரை பண்ணலாம். நாளைக்கு போட்டில கங்கூலியயும் உத்தப்பாவையும் ஓபனிங் இறக்கி, கார்த்திக்க ஒன்டவுனா இறக்கலாம்.
அதேமாதிரி பவுலிங்ல ரெண்டு ஸ்பின்னர்களை நாளைக்கு முயற்சி பண்ண வாய்ப்பிருக்கு. இந்த மைதானம் சுழற்பந்துக்கு சாதகமா இருக்கும். ஆனா ரெண்டு ஸ்பின்னர்ஸ் எடுத்தா வேகப்பந்து வீச்சாளர்கள்ல யாரையாவது கழட்டி விடனும். அதனால் கும்ப்ளேயவும் அடுத்த மேட்ச்ல ட்ரை பண்ணலாம். என்னோட 11 பேர்
கங்கூலி
உத்தப்ப்பா
கார்த்திக்
திராவிட்
சச்சின்
யுவராஜ் சிங்
டோணி
பதான்
ஹர்பஜன்
முனாஃப் படேல்
ஜாகிர் கான்
உங்க 11 பேரையும் சொல்லுங்க. யார் சொல்ற 11 பேர் நாளைக்கு ஆடறாங்கன்னு பார்க்கலாம் :) .
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 2:30 PM 13 comments
Labels: இந்தியா, உலகக்கோப்பை, பங்களாதேஷ்
Thursday, March 15, 2007
நகம் கடிக்க வைத்த அயர்லாந்து ! !
காலையில தான் "கடுப்படிக்கும் முதல் சுற்று போட்டிகள்"னு ஒரு பதிவு போட்டேன். அதை படிச்சு தொலைச்சிட்டாங்களோ என்னமோ, ஜிம்பாப்வேக்கும் எனக்கும் சேர்த்து மூக்கறுத்துட்டாங்க அயர்லாந்து.
இந்த உலகக்கோப்பையின் முதல் பரபரப்பான ஆட்டத்தை குடுத்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தி இருக்காங்க அயர்லாந்து அணியினர். இரண்டு அணியுமே "Underdogs" என்பதால் இந்த போட்டியின் முடிவு பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தாதுன்னாலும், எங்களாலயும் சுவாரசியமா ஆடமுடியும்னு நிரூபிச்சதுக்காக ரெண்டு அணிகளுக்கும் ஒரு ஷொட்டு! எதிர்பார்த்ததையும் விட மகாமோசமா விளையாடி தோத்ததுக்காக பெர்முடாவுக்கு ஒரு கொட்டு. (கொட்டு ஷொட்டு : நன்றி சாத்தான்குளத்தான்)
டாஸில் ஜெயித்த ஜிம்பாப்வே அயர்லாந்தை பேட் செய்ய சொல்லிட்டாங்க. முதல் ஓவரிலேயே துவக்க ஆட்டக்காரரான போர்டர்ஃபீல்ட் ஆட்டமிழந்து திரும்பினாலும் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஜெர்மி ப்ரே நிலைத்து ஆடினார். மறுமுனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்துகிட்டே இருந்துது. 89/5 என்ற நிலையில் இருந்தது அயர்லாந்து. 150 ரன்னுக்கு சுருண்டுடுவாங்க, இதுவும் சப்பை மேட்சா தான் இருக்கப்போகுதுன்னு நினைச்சேன். ஆனா ப்ரேயும் ஒயிட்டும் 6வது விக்கெட்டுக்கு 56 ரன் அடிச்சு கொஞ்சம் நல்ல நிலமைக்கு கொண்டு வந்தாங்க. அதுக்கப்புறம் வந்தவங்க உதவியோட ப்ரே ஸ்கோரை 50 ஓவருக்கு 221 ரன்னுக்கு கொண்டு வந்தாரு. கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காம 115 ரன் வேற அடிச்சாரு. ஓபனிங்க் இறங்கின பேட்ஸ்மென் கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காம் இருக்குறது உலகக்கோப்பைல இது 12வது முறை. அதோட ஒரு தொடக்க ஆட்டக்காரர் டக் அவுட்டாகி, இன்னொருத்தர் சதமடிக்கறது உலகக்கோப்பைல 2வது முறை. முன்னால 1992ல நியூசிலாந்துக்கு எதிரா அமீர் ஷோகைல் டக்கும், ரமீஸ் ராஜா சதமும் அடிச்சாங்க! ஜிம்பாப்வேல மூனு பந்து வீச்சாளர்கள் தலா 2 விக்கெட் எடுத்தாங்க (அவங்க பேரெல்லாம் தமிழ்ல எழுதினா விரல் சுளுக்கிடும் போலிருக்கு :) )
222 என்ற வெற்றி இலக்கோட ஆட வந்தாங்க ஜிம்பாப்வே. ஒருகட்டத்துல சுலபமா ஜெயிக்கற மாதிரி தான் இருந்தாங்க. தொடக்க ஆட்டக்காரரான் சிபாண்டவும், Matsikenyeri ( சத்தியமா எப்படி இவர் பேரை சொல்றதுன்னு தெரியலைங்க ) இருந்த வரைக்கும் ஈஸியா ஜெயிக்க போற மாதிரி தான் இருந்துது. 28 ஓவர்ல 128/3ங்கற வலுவான நிலையில் இருந்தாங்க. 22 ஓவர்ல 94 ரன் அடிச்ச போதும். கையில ஏழு விக்கெட் வேற. அப்போ சிபாண்டா அவுட்டாயி போனாரு. டெய்லரும்,Matsikenyeri யும் ஜோடி சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்து 203 ரன்னுக்கு கொண்டு வந்தாங்க. 6 ஓவர்ல 19 ரன், 4 விக்கெட்னு இருந்தது. யாருமே அந்த நிலைமைல ஜிம்பாப்வே ஜெயிச்சுடும்னு தான் நினைச்சிருப்பாங்க. பவுலர் கையில பட்டு பந்து ஸ்டம்ப்ல பட்டதுல துரதிர்ஷ்டவசமா டெய்லர் அவுட்டானாரு. 212 ரன் இருக்கும்பொழுது 7வது விக்கெட்டும் விழுந்தது. இனி ball-by-ball பார்க்கலாமா.
2 ஓவர்கள் 9 ரன்கள் 3 விக்கெட். 49வது ஓவரை போட்டவரு ப்ரையன்.
48.1 ஃபுல்டாஸா வந்த பந்தை அடிச்சு கவர்ச்ல கேட்ச் குடுத்து அவுட்டானாரு உட்செயா.
11 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.2 மெதுவா வந்த பந்தை மிட்-ஆனுக்கு அடிச்சாரு Mpofu.ரன் எதுவுமில்லை.
10 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.3 பவுலர்கிட்டயே திருப்பி அடிச்சாரு Mpofu.ரன் எதுவுமில்லை.
9 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.4 இன்சைட் எட்ஜ் வாங்கி கீப்பர் கிட்ட போன பந்து. ரன் எதுவுமில்லை
8 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.5 ஸ்டெரெயிட்ட திருப்பி அடிச்ச பந்தை திறமையா வலது காலால த்டுத்தாரு ப்ரையன். ரன் எதுவுமில்லை.
7 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.6 மிட்-ஆன் பகுதில வேகமா அடிச்சிட்டு ரன் எடுக்க முயற்சி பண்ணி ரன் அவுட் ஆனாரு Mpofu
6 பந்துகள் 9 ரன்கள் 1 விக்கெட்
அடுத்து கடைசி ஓவரை போட்டவரு ஒயிட்.
49.1 ஃபுல்டாஸா வந்த பந்தை கவர் பகுதில அடிச்சு 2 ரன் எடுத்தாரு Matsikenyeri.
5 பந்துகள் 7 ரன்கள் 1 விக்கெட்
49.2 அளவு குறைந்து வந்த பந்தை ஸ்கொயர் கட் பண்ணி 2 ரன்கள் எடுத்தாரு Matsikenyeri
4 பந்துகள் 5 ரன்கள் 1 விக்கெட்
49.3 ஃபுல்டாஸா வந்த பந்தை மிட்விக்கெட் பகுதிக்கு அடிச்சு 1 ரன் எடுத்தாரு Matsikenyeri. கேட்ச் ஆகியிருக்க வேண்டியது.
3 பந்துகள் 4 ரன்கள் 1 விக்கெட்
49.4 ரெயின்ஸ்ஃபோர்ட் கவருக்கு ட்ரைவ் பண்ணி 1 ரன் எடுத்தாரு.
2 பந்துகள் 3 ரன்கள் 1 விக்கெட்.
49.5 அளவு குறைந்து வைடா போன பந்தை கட் பண்ணி 2 ரன்கள் எடுத்தாரு Matsikenyeri
1 பந்து 1 ரன் 1 விக்கெட்
49.6 ட்ரைவ் பண்ணி பந்தை மிஸ் பண்ணாரு Matsikenyeri.பந்து கீப்பர் கிட்ட போனதால ரன் எதுவும் எடுக்க முடியாம ரன் அவுட் ஆயிட்டாரு ரெயின்ஸ்ஃபோர்ட்.
ரெண்டு அணியும் 221 ரன்கள் எடுத்ததால் மேட்ச் டை ஆனாதா அறிவிக்கப்பட்டது. ஜிம்பாப்வேக்கு இது பெரிய ஏமாற்றம்னாலும் அயர்லாந்துக்கு வெற்றி தான். So near yet so farனு அடிக்கடி சொல்ற மாதிரி ஆயிடுச்சு இன்னைக்கு ஜிம்பாப்வேயோட நிலைமை. உலகக்கோப்பைல டை ஆகற மூனாவது மேட்ச் இது. 1999ல ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்க அரையிறுதிப் போட்டி டை ஆகி ஆஸ்திரேலியா ஃபைனல்ஸுக்கு போனாங்க. அலன் டொனால்ட் ரன் அவுட்டான அந்த காட்சி மறக்க முடியாதது. தென்னாப்பிரிக்கா ஜெயிக்க வேண்டிய கோப்பை அந்த ஒரு ரன்னால பறிபோனது. 2003ல இலங்கை-தென்னாப்பிரிக்கா போட்டி டை ஆகி தென்னாப்பிரிக்கா இரண்டாவது சுற்றுக்கு போக முடியாம் போச்சு. முதல் போட்டில டொனால்ட் வில்லன்னா இரண்டாவதுல டக்வொர்த்-லெவிஸ் விதிகளும், சரியான கம்யூனிகேஷன் இல்லாததும் வில்லனா அமைஞ்சது.
பயிற்சி போட்டில தென்னாப்பிரிக்காவுக்கு தண்ணி காட்டினதையும் இன்னைக்கு ஆடினதையும் பார்க்கும் பொழுது தோணறது..
WELL DONE IRELAND ! ! !
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:20 PM 29 comments
Labels: அயர்லாந்து, உலகக்கோப்பை, ஜிம்பாப்வே
கடுப்படிக்கும் முதல் சுற்று போட்டிகள் :(
நெஜமாவே இந்த முதல் சுற்று போட்டிகள் தேவை தானானு தோனுது. போறவர அணிகளையெல்லாம் புடிச்சு போட்டு முதல் சுற்றை ஒரு சுவாரசியமே இல்லாம பண்ணிட்டாங்களோனு தோனுது. எப்படியும் (99.99%) எட்டு பெரிய அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாக்கிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்த சுற்றுக்கு போகப்போகுது. எதாவது ஒன்னு ரெண்டு போட்டிகள்ல சிறு அணிகள் ஜெயிச்சாலும், அடுத்த சுற்றுக்கு போறது கஷ்டம் தான்.
எந்த முறையும் இல்லாம் இந்த முறை ஐசிசி மினோஸ்னு சொல்லப்படும் 8 பலம் குறந்த அணிகளை சேர்த்திருக்கு. பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்றவர்கள் (தாற்காலிகமாக ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் விளயாடுவதை நிறுத்தி வைத்துள்ளது) . அதுவுமில்லாம சிலமுறை பெரிய அணிகளையும் தோற்கடிச்சிருக்காங்க. கென்யாவும் அதே மாதிரி சில ஆச்சரியங்களை நிகழ்த்தி இருக்காங்க. போன முறை நடந்த சில குளறுபடிகளால அரை-இறுதி வரைக்கும் வந்தாங்க. அவங்களை கணக்கில சேர்க்காம பார்த்தா மீதி இருக்க ஐந்து அணிகளான கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, பெர்முடா, ஸ்காட்லாந்து ஆகியவை சும்மா ஒப்புக்கு சப்பாணியா சேர்க்கப்பட்ட மாதிரியே தெரியுது.
பங்களாதேஷும், கென்யாவும் மட்டும் தான் பெரிய அணி எதையாவது தோற்கடிச்சு ஆச்சரியத்தை தரக்கூடிய மாதிரி இருக்காங்க. மத்த அணி எதுவும் அவ்வளவு திறமை வாய்ந்ததா தெரியல. ஃப்ளவர் பிரதர்ஸ், கேம்ப்பெல், ஸ்ட்ரீக், ப்ராண்டிஸ், நீல் ஜான்சன்னு ஒருகாலத்துல நல்ல நிலைமைல இருந்த ஜிம்பாப்வே அணியும் இப்போ உள்நாட்டு பிரச்சனைகள்,சம்பளப் பிரச்சனை போன்ற காரணங்களால பலவீனமா இருக்கு. இவங்களால பெரிய அணி எதையும் தோற்கடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
இவ்வளவு பலம் குறைந்த அணிகள சேர்த்துக்கு காரணமா ஐசிசி சொல்றது அந்த நாட்டுல கிரிக்கெட்ட வளர்க்கனும், அவங்களுக்கும் பெரிய நாடுகளோட விளையாடற அனுபவம் கிடைக்கனும். இது நல்ல காரணம்னாலும், அதுக்காக இவ்வளவு அணிகளுக்கு வாய்ப்புதரனுமாங்கறது தான் கேள்வி. தற்பொழுது ODI Status இல்லாத நாடுகளுக்கு நடத்தப்படும் ஐசிசி ட்ராஃபில முதல் அஞ்சு இடத்தை பிடிக்கற அணிகளுக்கு உலகக்கோப்பைல ஆடுற வாய்ப்பும் அடுத்த ஐசிசி ட்ராஃபி வரைக்கும் ODI Status-ம் தரப்படுது. அதுக்கு பதிலா முதல் இரண்டு இடத்தை பிடிக்கற அணிகளுக்கு மட்டும் உலககோப்பைல வாய்ப்பு வழங்கலாம். முதல் ஐந்து அணிகளுக்கு ODI Status மட்டும் கொடுக்கலாம். அதோட டெஸ்ட் போட்டி தகுதி இருக்கற பத்து அணிகளும்,கென்யாவும் வருஷத்துக்கு ஒருதடவையாவது இந்த ஐந்து அணிகள்ல எதாவது ஒரு அணியோட ஒருநாள் போட்டித்தொடர் கண்டிப்பா விளையாடனும்னு சொல்லலாம். இதனால் அந்த அணிகளுக்கு பெரிய அணிகளோட விளையாடற அனுபவமும் கிடைக்கும், அவங்க நாட்டுல கிரிக்கெட் பிரபலமும் அடையும்.
இதோட இன்னொரு சிறப்பு என்னன்னா உலகக்கோப்பை மாதிரி ஒரு பெரிய போட்டில தேவையில்லாத கூட்டம் குறையும். இந்த மாதிரி அணிகள் ஆடறதால் 300 ரன் அடிக்கறது சாதாரனமா ஆயிடுச்சு. இதுவரைக்கும் உலகக்கோப்பைல 30 முறை 300 ரன்களுக்கு மேல அடிக்கப்பட்டிருக்கு. அதுல 21 முறை இது மாதிரி சிறு அணிகளுக்கு எதிரா அடிச்சதுதான்.இது நேத்து ஆஸ்திரேலியா அடிச்ச 334யும் இன்று இலங்கை அடிச்ச 321யும் சேர்க்காம. இதனால போட்டிகளுக்கு வர கூட்டமும் குறைஞ்சிடுச்சு. ஆளே இல்லாத ஸ்டேடியத்துல போட்டி நடத்தி என்னத்தையா கிரிக்கெட்ட வளர்க்க போறீங்க??
1975ல முதல் உலகக்கோப்பைல பார்த்திங்கன்னா இலங்கையும், கிழக்கு ஆப்பிரிகாவும் மட்டுமே இந்த மாதிரி சேர்க்கப்பட்டது. 1979ல இலங்கயும் கனடாவும். 1983ன் பொழுது இலங்கைக்கு 1981லயே டெஸ்ட் ஸ்டேட்டஸ் கிடைச்சதால் ஜிம்பாப்வே மட்டும் கூடுதலா சேர்க்கப்பட்டது. இந்த மூனு உலகக்கோப்பைலயும் 8 நாடுகள் தான் ஆடுனாங்க. 1987 உலகக்கோப்பைலயும் இதே நாடுகள் தான். 1992 உலகக்கோப்பைல தென்னாப்பிரிக்கா முதல்முறையா கலந்துகிட்டாங்க. ஜிம்பாப்வே டெஸ்ட் ஸ்டேட்டஸ் கிடைச்சதால் கலந்துகிட்டாங்க. முதல் தடவையா 8க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட உலகக்கோப்பை அதுதான்.
1996ல இருந்து தான் கூட்டம் சேர்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ கென்யா, நெதர்லாந்து மற்றும் UAE ஆகிய அணிகளோட சேர்த்து 12 ஆச்சு. 1999லயும் 12 அணிகள், 2003ல 14 அணிகள். அப்போ நிறைய அணிகள் இருந்தாலும் முதல் சுற்றுல இரண்டு குழுக்களாகவே பிரிக்கப்பட்டிருந்தது. அதனால் ஒன்னு ரெண்டு போட்டிகள் சொத்தையா இருந்தாலும், மத்த போட்டிகள் சுவாரசியமா இருந்தது. இந்த தடவை 16 அணிகள சேர்த்து அதையும் நாலு குழுவா பிரிச்சிட்டாங்க. ஒவ்வொரு குழுவுலயும் ரெண்டு சொத்தை அணிகள். அதுலயும் இந்தியாவுக்கு லக் இல்லை. கொஞ்சம் பலம் வாய்ந்த அணியான பங்களாதேஷை நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க. 17ம் தேதி வரைக்கும் நெருப்பை வயித்துல கட்டிகிட்டு இருக்கற மாதிரி ஆயிடுச்சு :) . நம்ம குழுவான் 'B'யை தான் இந்த முறை 'Group of Death'னு சொல்றாங்க.
மத்த குழுவுல எல்லாம் கண்டிப்பா ரெண்டு பெரிய அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மாதிரி தான் இருக்கு. ஐசிசியே அடுத்த சுற்றோட அட்டவணைல A1,A2,B1,B2னு போடாம அணிகளோட பேரை போட்டிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க! இதுல அடுத்த காமெடி புள்ளிகள் அடிப்படைல முதல் சுற்றுல 1,2 முடிவு பண்ணாம, தரவரிசை அடிப்படைல முடிவு பண்றது. அதனால் இந்தியா எல்லா போட்டிலயும் ஜெயிச்சா கூட B2 தான். இது என்ன லாஜிக்னு தெரியலை? அப்படியே தரவரிசை படி பார்த்தாகூட போனா உலகக்கோப்பைல இருந்து இந்த உலகக்கோப்பை வரை பார்க்கலாம். அப்படி இல்லாம ஏப்ரல் 2005ல இருந்த தரவரிசைய கணக்கில எடுத்திருக்காங்க. அப்போ தான் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதனால அந்த தேதில இருந்த தரவரிசையை கணக்குல எடுத்துகறாங்களாம்? ஐசிசிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா. போனதடவை ஃபைனல்ஸ் வரைக்கும் வந்த இந்தியா அந்த தரவரிசப்படி எட்டாவது இடம் :( .
இவ்வளவு அணிகள சேர்த்ததால உலகக்கோப்பையோட சுவாரசியமே குறஞ்சிடுச்சுன்னு நெறைய முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சொல்லியிருக்காங்க. அதே தான் நம்ம கருத்தும். அவங்களுக்கு வாய்ப்பும் அனுபவமும் தேவைதான். அதுக்கு உலகக்கோப்பையை பலிகடா ஆக்கனுமா? யோசிக்குமா ஐசிசி 2011க்குள் ?
குறிப்பு : இந்த பதிவை எழுத ஆரம்பிச்சப்ப இலங்கைக்கு எதிரா பெர்முடா பேட் செய்ய ஆரம்பிச்சாங்க. இப்போ ஸ்கோர் 17 ஓவர்ல 44/7. எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!
சிரமம் பார்க்காம நீங்களும் உங்க கருத்தை சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 12:10 PM 47 comments
Labels: உலகக்கோப்பை, முதல்சுற்று
Wednesday, March 14, 2007
ஆஸ்திரேலியா Vs ஸ்காட்லாந்து வீடியோ
இன்று ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.
டாஸில் ஜெயித்த ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு
334 ரன்கள் குவித்தது. கேப்டன் பாண்டிங் 113 ரன்கள் அடித்தார். இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை அவர் 85 பந்துகளில் அடித்தார். இன்று அவர் 9 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்தார். இதுவரை உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடித்த பெருமையை உடையவர் கங்கூலி (23 ஸிக்ஸ்கள்). இன்று 5 ஸிக்ஸ்கள் அடித்ததன் மூலம் பாண்டிங் அந்த சாதனையை முறியடித்தார் (24 ஸிக்ஸ்கள்). பாண்டிங் 23 ரன்கள் அடித்திருந்த பொழுது ஸ்காட்லாந்து அணியினர் அவர் கொடுத்த கேட்சை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் ஹெய்டன் 60 ரன்களும் கில்கிறிஸ்ட் 46 ரன்களும் அடித்தனர். மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. 300 ரன்களை 48.3 ஓவர்களில் அடைந்த ஆஸ்திரேலியா கடைசி 9 பந்துகளில் 34 ரன்கள் அடித்தது! அவ்வணியின் ஹாக் மின்னல் வேகத்தில் 15 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.
அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 40.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி ஆட்டக்காரரான ப்ளைன் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியின் வீடியோ (Highlights Runtime 30 Mins)
உலகக்கோப்பை பரிசுப்போட்டிகு நீங்கள் கூறிய பதில்களை சரி பார்க்க இங்கே செல்லவும்.
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:41 PM 14 comments
Labels: ஆஸ்திரேலியா, நினைவுகள், வீடியோ
நீங்கள் சொன்னவை ! ! !
உலகக்கோப்பை பரிசுப் போட்டியோட கடைசி நாள் மார்ச் 12ம் தேதியோட முடிஞ்சிடுச்சு. இதுவரைக்கும் 22 பேர் பதில் சொல்லி இருக்கீங்க. நீங்க சொன்ன பதிலை எல்லாம் தொகுது ஒரு Spreadsheet-ஆ போட்டிருக்கேன். பதில் சொன்ன எல்லாரும் உங்க பதில்களை சரி பார்த்துக்கோங்க. எதாவது பதில் தப்பா இருந்தா இல்லை உங்க பதில்களே இல்லைன்னா, பின்னூட்டத்தில சொல்லுங்க. முன்னால நீங்க போட்ட பதில்களின் பின்னூட்டத்தோட சரிபார்த்து திருத்திடறேன்.
ஏப்ரல் 28 இல்லை 29 வெற்றி பெற்றவர் யாருன்னு தெரியும்.
பதில் சொன்ன 22 பேருல இந்தியா கோப்பையை ஜெயிக்கும்னு சொல்லியிருக்கறவங்க 14!
ஆஸ்திரேலியா 4, பாக்கிஸ்தான்,இங்கிலாந்து,தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து தலா 1.
இந்தியா சம்பந்தப்பட்ட 3 கேள்விகள் (கேள்வி 5,6,7) தவிர மீதி எல்லா கேள்விகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களின் பேரை சொல்லியிருக்கார் தீவிர ஆஸ்திரேலிய ரசிகரான மோகன்தாஸ்!
எந்த கீப்பர் அதிக கேட்ச் பிடிப்பாருங்கற 10வது கேள்விக்கு 15 பேர் கில்கிறிஸ்ட்னு சொல்லியிருக்காங்க. நம்ம தோனிக்கு கிடைச்ச ஓட்டு 4 தான் :(
எந்த மட்டையாளர் இந்த உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடிப்பார் என்ற 9வது கேள்விக்கு ரிக்கி பாண்டிங்னு பதில் சொன்னவங்க மு.கார்த்திகேயனும், ஜி-zயும். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷப்பட்டுக்கலாம். இன்னைக்கு நடந்த ஒரு போட்டியிலேயே பாண்டிங் 5 ஸிக்ஸ் அடிச்சிட்டாரு!
பார்கலாம் யாரு ஜெயிக்கறாங்கன்னு!!
உங்கள் பதில்கள்
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 4:28 PM 12 comments
Labels: உலகக்கோப்பை, போட்டி
Tuesday, March 13, 2007
பாகிஸ்தான் பரிதாப தோல்வி ! ! வீடியோ மற்றும் அலசல்
இன்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 54 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகளிடம் பரிதாபமாக தோற்றது.
9வது உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடந்தது. டாஸில் ஜெயித்த இண்சமாம் மேற்கிந்தியத்தீவுகளை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த உலகக்கோப்பையின் முதல் பந்தை பாகிஸ்தானின் உமர் குல் வீசினார். கிறிஸ் கேல் அதை மிட்-விக்கெட் பகுதிக்கு தட்டி ஒரு ரன் எடுத்தார். தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய கேல் 6 பந்துகளில் 2 ரன் எடுத்திருந்த பொழுது, 3வது ஓவரில் குல்லின் ஆஃப்-சைடில் அளவு குறைவாக விழுந்து வெளியே ஸ்விங்காகி சென்ற பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரையடுத்து களமிறங்கிய சர்வான் முதல் பந்திலேயே ஸ்லிப்பில் நின்றிருந்த யூனிஸ்கானிடம் கேட்ச் கொடுத்தர். மிகச் சுலபமான கேட்சை யூனிஸ் தவறவிட்டார். அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கு மறியிருக்கக் கூடும். அதன் பின் சந்தர்பாலும் சர்வானும் ஜோடி சேர்ந்து ஆடினர். ஒருமுனையில் சர்வான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டிருக்க மறுமுனையில் சந்தர்பால் மிகவும் பொறுமையாக ஆடினார். அதனால் அணியின் ரன்ரேட் மிக குறைவாகவே இருந்தது. 20வது ஓவரில் இஃப்திகரின் பந்தில் கீப்பர் அக்மலிடம் கேட்ச் கொடுத்து சந்தர்பால் அவுட்டானார். அவர் மிக மெதுவாக் விளையாடி 63 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்பொழுது அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் 64 மட்டுமே. அதன் பின் 24வது ஓவரில் சர்வானும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி திரும்பினார். அவர் 65 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தார்.
24 ஓவர்களில் 77/3 என்ற மோசமான் நிலையில் லாரவுடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். அதன் பின் ஆட்டம் சூடு பிடித்தது. சாமுவேல்ஸ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரும், ரன்ரேட்டும் உயர வழி செய்தார். இருவரும் சேர்ந்து 16 ஒவர்களில் 91 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்திய அணி சொற்ப ரன்களுக்கு மீண்டும் ஆட்டமிழக்கும் என்ற நிலையில் இருந்து சுதாரித்து ஆடத்தொடங்கியது. அணியின் ஸ்கோர் 168ஆக உயர்ந்த பொழுது ஹஃபீஸின் பந்தை லாரா ஸ்வீப் செய்ய முயன்று கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சாமுவேல்ஸும், ராம்தினும் அவுட்டாகி திரும்பினர். லாரா 37 ரன்களும் சாமுவேல்ஸ் 63 ரன்களும் அடித்தன்ர். பின்னர் களமிறங்கிய ஸ்மித் அதிரடி ஆட்டம் ஆடினார். 15 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் 2 சிக்ஸ்களுடன் 32 ரன்கள் அடித்தார். மற்றொரு ஆட்டக்காரரான் ப்ரேவொ 17 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரின் முயற்சியால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 241 எனற கெளரவமான் ஸ்கோரை அடித்தது. கடைசி பத்து ஓவர்களில் 85 ரன்கள் அடிக்கப்பட்டது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் அடித்தனர்.
பாகிஸ்தானின் இஃப்திகர் அஞ்சும் 10 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்தபடியாக் உமர் குல் மற்றும் ஹஃபீஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் மொத்தம் 11 உதிரிகளை விட்டுக்கொடுத்தது. சர்வானின் தவற விடப்பட்ட கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
50 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது பாகிஸ்தான். பவல் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை ஸ்கொயர்-லெக் திசையில் ஸிக்ஸ் அடித்து இம்ரன் நசீர் தனது கணக்கையும் அணியின் கணக்கையும் துவக்கினார். துரதிர்ஷ்டவசமாக அடுத்த பந்திலேயே ட்ரைவ் செய்ய முயன்று கீப்பர் ராம்தினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 4வது ஓவரில் அணியின் ஸ்கோர் 17ஆக இருந்தபொழுது, உயரம் அதிகமாக வந்த பந்தை ஹுக் செய்ய முயன்று கீப்பரிடம் கேச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினனர் யூனிஸ்கான். அவர் 13 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த யூசுஃபும், ஹஃபீசும் பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை 10 ஓவர்களில் 39 ரன்களாக உயர்த்தினர். தலைக்கு மேல் தூக்கி அடிக்க முயன்று மிட்-ஆனில் கேட்ச் கொடுத்து அவுட்டானர் ஹஃபீஸ். அதன்பின் இண்சமாமும், யூசுஃபும் சேர்ந்து நாலாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். இருந்த போதிலும் அணியின் ரன்ரேட் மிகக்குறைவாகவே இருந்தது. 29 ஓவர்களில் 99 ரன்கள். தேவைப்படும் ரன்ரேட் ஏறக்குறைய 6.7 ஆக இருந்தது. அப்பொழுது அளவு குறைவாக விழுந்து எழும்பி வந்த பந்தை தடுத்தாட முயன்று கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர் யூசுஃப்.
அதன்பின் விக்கெட்டுகள் மடமடவென சரிய ஆரம்பித்தன. யூசுஃப் 37 ரன்களும் இண்சமாம் 36 ரன்களும் அடித்தனர். 33 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் என்ற பரிதாப நிலையில் தத்தளித்தது பாகிஸ்தான். ஒருமுனையில் ஷோஹைப் மாலிக் அடித்து ஆடிய பொழுதிலும் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் தோல்வியை நோக்கி வேகமாக முன்னேறியது பாகிஸ்தான். 187 ரன்கள் இருந்த பொழுது கடைசி மூன்று விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. மாலிக் 54 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். மேற்கிந்தியத்தீவுகளின் ஸ்மித் மற்றும் ப்ரேவோ தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மற்றும் 15 பந்துகளில் 32 ரன்கள் அடித்த காரணத்திற்காக ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பயிற்சி போட்டிகளின் பொழுது இலக்கின்றி தடுமாறிய மேற்கிந்திய அணி சரியான நேரத்தில் சிறப்பாக ஆடி 2 புள்ளிகளை வென்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் (அயர்லாந்து, ஜிம்பாப்வே) வெற்றி பெற்றால் பாகிஸ்தான் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும். புது விதிகளின்படி மேற்கிந்திய அணியைவிட புள்ளிகள் குறைவாக இருந்தாலும், தரவரிசைப்படி முன்னிலையில் உள்ளதால் D1 ஆகவே சூப்பர்8 சுற்றுக்கு செல்லும். இருப்பினும் மற்றொரு புது விதியின்படி, முதல் சுற்றில் தகுதிபெறும் மற்றொரு அனிக்கு எதிராக எடுத்த புள்ளிகள் மட்டுமே சூப்பர்8ல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், மேற்கிந்திய அணி 2 புள்ளியுடனும், பாகிஸ்தான் 0 புள்ளியுடனும் சூப்பர் 8க்கு செல்லும். இது பாகிஸ்தான் அணி அரை-இறுதிக்கு தகுதி பெற பின்னடைவாகவே இருக்கும். இதே காரணத்தால் இந்தியா இலங்கையை ஜெயிக்க வேண்டியது முக்கியமாகும். சூப்பர்8க்கு தகுதி பெற்றாலும், முதல் சுற்றில் பெறும் இவ்விரு புள்ளிகள் அரை-இறுதிக்கு செல்லும் அணிகளை முடிவு செய்வதில் முக்கிய பங்காற்றும்.
விரிவான ஸ்கோர்கார்ட்.
இந்த போட்டியின் வீடியோ தொகுப்பு (Highlights Runtime 1 Hr 17 Mins)
போட்டிகள் நடைபெறும்பொழுது நேரடியாக(Live) பார்த்து ரசிக்க
இங்கே க்ளிக்கவும்
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:15 PM 22 comments
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், வீடியோ
பாகிஸ்தான் Vs மேற்கிந்தியத்தீவுகள் போட்டி Watch 'LIVE'
தமிழ்மணம் நண்பர்களுக்காக! அனைத்து போட்டிகளையும் நேரடியாக கண்டு மகிழுங்கள்!
Click on the link 'wc07' below
Wait for the pop-up window to load.
If you can't see the webplayer download the sopcast webplayer from http://download.sopcast.com/download/SopCastOcx.zip .
Download the zip file, extract and install the exe file.
After installing the webplayer, try refreshing the pop-up window.
You need hi-speed internet to enjoy the match. It takes around 3 to 4 minutes to buffer initially. After that it's cool!
It's working fine for me.
Enjoy your WORLD CUP ! !
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 11:40 AM 36 comments
Labels: Live, உலகக்கோப்பை, வீடியோ
Monday, March 12, 2007
உலகக் கோப்பை உங்கள் கையில் ! ! - EXCEL FILE
உலகக்கோப்பை நாளை தொடங்கவிருக்கும் நிலையில், நடக்கவிருக்கும் போட்டிகள், வெற்றி பெற்றவர்களின் விவரங்கள், பெற்றுள்ள புள்ளிகள் போன்ற விவரங்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு எக்ஸெல் ஃபைல். ஒவ்வொரு க்ரூப்பிலும் எந்த அணி முன்னிலையில் உள்ளது, எவ்வளவு புள்ளிகள் போன்றவற்றை எந்த வலைத்தலத்திற்கும் போகாமல் உங்கள் கணினியிலேயே தெரிந்து கொள்ளலாம். செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும், அந்த போட்டி உள்ள வரியில்(Row), வெற்றி பெற்ற அணிக்கு ஒரு + அல்லது 1 உள்ளிட வேண்டியது தான்.
இதில் முதல் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற அணியின் கட்டத்தில் '+' அல்லது '1' உள்ளிட்டால் தானாகவே புள்ளிகள், மற்றும் சூப்பர் 8க்கு தகுதி பெறும் அணிகள் ஆகியவை நிரப்பப்படும். ஒரு க்ரூப்பின் அனைத்து போட்டிகளின் முடிவுகளையும் உள்ளிட்ட பிறகு தகுதி பெறும் இருஅணிகளின் பெயரும் சூப்பர் 8ல் தெரிவதை பார்க்கலாம்.
இதேபோல் சூப்பர் 8 போட்டிகளின் பொழுது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணியை உள்ளிட்டால், முதல் நான்கு இடம்பெறும் அணிகளை காணலாம்.
தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக்கவும்.
I assure that this file is free of any Virus,Spyware,Adware or any other malicious stuff
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:10 PM 33 comments
Labels: Datasheet, Excel, உலகக்கோப்பை
உலகக்கோப்பை தொடக்கவிழா வீடியோ ! !
9வது உலகக்கோப்பையின் தொடக்கவிழா நேற்று ஜமைக்காவில் நடந்தது அனைவரும் அறிந்ததே. அந்நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு தமிழ்மணம் நண்பர்களுக்காக.
சற்றே நீளமான வீடியோ (2 மணிநேரம்!) ஆணி அதிகமமில்லாதவர்கள் பொறுமையாக பார்த்து ரசியுங்கள். ஆஃபிஸில் மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல :)
பரிசுபோட்டி கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டிங்களா??? இன்று கடைசி நாள்!
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 9:41 AM 33 comments
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட், தொடக்கவிழா, வீடியோ
Sunday, March 11, 2007
பதில்களை சொல்லுங்கள் ! பரிசை வெல்லுங்கள் ! !
இன்னும் ஒரு நாள் தான் இருக்குங்க. தினகரன் மாதிரி தினமும் 100 பேருக்கு பரிசெல்லாம் தர நிலைமைல இல்லை :). அதனால ஒரே ஒருத்தருக்கு மட்டும் நூறு டாலர் பரிசு. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இந்த உலகக்கோப்பை பற்றிய உங்களது யூகங்களை பதிலா சொல்ல வேண்டியது தான். முன்னால 11ம் தேதி கடைசி நாள்னு சொல்லியிருந்தேன். 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனதால 12ம் தேதி இரவு 11:59 PDT வரைக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கு.
இதுவரைக்கும் 16 பேர் பதில் சொல்லி இருக்காங்க.நீங்களும் வந்து பதில் சொல்லி கலக்குங்க!
பரிசுப் போட்டிக்கான கேள்விகள் மற்றும் விவரங்களுக்கு இங்கே
வெற்றி பெற வாழ்த்துக்கள் ! !
உலகக்கோப்பை தொடக்கவிழா படங்கள்
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 11:04 PM 10 comments
Labels: உலகக்கோப்பை, பரிசுப்போட்டி
இந்தியா Vs மேற்கிந்தியத்தீவுகள் போட்டியின் வீடியோ ! !
நேத்து நடந்த பயிற்சி போட்டில இந்தியா மேற்கிந்தியத்தீவுகளை 85 ரன்னுக்கு சுருட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில ஜெயிச்சது எல்லாருக்கும் தெரியும். அந்த மேட்சை பார்க்கும் வாய்ப்பை இழந்தவங்களுக்காக வீடியோ தொகுப்பு இங்கே..
பார்த்து ரசியுங்கள்...
வெற்றிகள் தொடரட்டும்!!!
நீங்களும் 100 டாலர் பரிசு பெற இங்கே வாங்க..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு பதில் சொல்ல!
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 1:35 PM 17 comments
Labels: இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், போட்டி, மேற்கிந்தியத்தீவுகள், வீடியோ