Friday, April 6, 2007

போவோமா ஊர்கோலம்..
ஒரு வாரம் Los Angeles,Disney Land, San Diegoனு ஊர் சுத்த கிளம்பியாச்சு. அதனால இந்த வாரம் பதிவுகள் போடறது கஷ்டம். அடுத்த வாரம் (ஏப்ரல் 14) மீட் பண்ணலாம். அது வரைக்கும் :-h :-h

Wednesday, April 4, 2007

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ?
கிரிக்கெட்டின் மற்றொரு முகமான Twenty/20 போட்டிகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் தற்பொழுது இந்த போட்டியையும் ஆடுகிறார்கள். பாகிஸ்தான்,இலங்கை,இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் Twenty/20 கோப்பைக்கான உள்நாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இன்னும் அவ்வளவு பிரபலமா ஆகவில்லையெனினும், இதுதான் கிரிக்கெட்டின் எதிகாலம்னு ஒரு பேச்சு இருக்கு. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி கூட ஒரு Twenty/20 போட்டியில் விளையாடி ஜெயித்தார்கள். இதுதான் இந்திய அணி ஆடியிருக்கும் ஒரே Twenty/20 போட்டி. தற்பொழுது மண்டல அணிகளுக்கு இடையேயான Twenty/20 போட்டிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் தொடர்ந்து ஆடும் டெஸ்ட் போட்டியை பார்க்க பொறுமையில்லாதவர்களுக்கு ஒரு மாற்றாக ஒருநாள் போட்டிகள் இருந்தது. பரபரப்புக்கும், சுவாரசியங்களுக்கும் குறைவில்லாத இப்போட்டிகள் ரசிகர்களை கட்டிப்போட்டது. இன்றைய வேகமான உலகில் ஒருநாள் முழுதும் செலவழித்து ஒரு ஆட்டத்தை ஆடுவதும் அதிகமாகவே தோன்றுகிறது. இதுவே கூட நிறைய நாடுகள் கிரிக்கெட்டில் ஆர்வமில்லாமல் இருப்பதற்கும் ஒரு காரணம். இதற்கெல்லாம் ஒரு தீர்வாக வந்திருப்பதே Twenty/20 போட்டிகள். முதல் அதிகாரபூர்வ Twenty/20 போட்டி இங்கிலாந்தில் 2003ம் ஆண்டு ஆடப்பட்டது. கால்பந்தாட்டம், ஹாக்கி போல இப்போட்டிகளும் குறைவான நேரத்தில் ஆடப்படுகிறது. சுமாராக ஒரு போட்டி மூன்று மணிநேரத்தில் முடிந்துவிடுவது இதன் சிறப்பு.

இப்போட்டிகளை பிரபலப் படுத்துவதன் மூலம் விரைவில் ஒலிம்பிக்கில் சேர்க்க ஐசிசி முயன்று வருகிறது. போட்டிநேரம் காரணமாக ஒலிம்பிக்கில் இடம்பெற முடியாமல் இருந்ததால், மற்ற விளையாடுகள் போல் கிரிக்கெட்டையும் விரைவில் ஆடி முடிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் முதல் Twenty/20 உலக சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இவை அனைத்தும் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்த ஐசிசி எடுத்து வரும் முயற்சிகள்.

Twenty/20 எப்படி விளையாடப்படுகிறது, அதன் விதிமுறைகள் என்ன என்பவை தெரியாதவர்களுக்காக..

ஒவ்வொரு அணியும் 20 ஓவர்கள் வீசும்.

வழக்கம்போல் ஒவ்வொரு அணியிலும் பதினொன்று வீரர்கள் இருப்பார்கள். ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள் வீசலாம்.

நோ-பாலுக்கு 2 ரன்கள் கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி அதற்கடுத்த பந்து 'Free Hit Delivery'யாக எடுத்துக்கொள்ளப்படும். இதில் ரன் அவுட் முறையில் மட்டுமே ஒரு பேட்ஸ்மேனை அவுட்டாக்க முடியும். இது ஒருநாள் போட்டிகளில் இரண்டு நோ-பால் வீசுவதற்கு சமம்.

ஒவ்வொரு அணியும் தங்களது 20 ஓவர்களை 75 நிமிடங்களில் வீசி முடிக்க வேண்டும். அப்படி வீசி முடிக்காவிட்டால், 75 நிமிடங்களுக்குப் பிறகு வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் கூடுதலாக ஆறு ரன்கள் பேட்டிங் டீமுக்கு வழங்கப்படும். பேட்டிங் செய்யும் அணியால் நேரம் விரயமாக்கப்பட்டிருந்தால் கூடுதல் நிமிடங்கள் அளிப்பது குறித்து நடுவர்கள் முடிவெடுக்கலாம்.

தேவையின்றி நேரத்தை வீண் செய்யும் அணியின்(பேட்டிங்/பவுலிங்) ஸ்கோரில் ஐந்து ரன்கள் குறைக்கப்படும்.

முதல் ஆறு ஓவர்களுக்கு இரண்டு தடுப்பாளர்கள் மட்டுமே 30 யார்ட்க்கு வெளியே நிற்க முடியும். அதன் பின் ஐந்து தடுப்பாளர்கள் மட்டுமே எல்லைக்கோட்டில் நிற்க முடியும்.

இரு அணிகளும் சமமான் ரன்கள் எடுத்திருந்தால் Bowl-Out முறையில் வெற்றி பெறும் அணி தீர்மானிக்கப்படும். Bowl-Out பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.இப்போட்டிகளால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள்..

டெஸ்ட் போட்டிகளில் இருக்கும் தரம் மற்றும் ஜென்டில்மேன்ஷிப் ஒருநாள் போட்டிகளில் குறைந்துவிட்டதாக் ஒரு குற்றச்சாட்டு உண்டு. Twenty/20 போட்டிகளால் அது மேலும் குறைய வாய்ப்புள்ளது.

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளின் வேகத்திற்கேற்ப வீரர்கள் குறைந்தது 30 ஓவர்களாவது (முதல் 20 மற்றும் கடைசி 10) அடித்து ஆட வேண்டிய சூழ்நிலை உள்ளது. 20 ஓவர்கள் கொண்ட இப்போட்டிகளால் தொடக்கத்திலிருந்து இறுதி வரை அடித்து ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது கிரிக்கெட்டின் தரத்தை மேலும் குறைக்கக்கூடும்.

நடுவர்களின் பொறுப்பு அதிகரிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாத அணிகளுக்கு விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், இதில் முடிவெடுக்க வேண்டிய பொறுப்புள்ள நடுவர்கள் செய்யும் சிறு தவறும் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்.

இப்போட்டிகள் பிரபலமடைந்தால், காலம் காலமாக ஆடப்பட்டு வரும் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு குறையும். இது காலப்போக்கில் டெஸ்ட் போட்டிகளே இல்லாத நிலையை கூட உருவாக்கக்கூடும்.இதில் ஒருநாள் போட்டிகளும் விதிவிலக்கல்ல.


சாதகங்களும் பாதகங்களும் நிறைந்த Twenty/20 போட்டிகள் வெற்றி பெறுமா? காலமும் கிரிக்கெட் ரசிகர்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tuesday, April 3, 2007

ICL Indian Cricket League - சாத்தியமா ? ? ?

இந்தியா உலகக்கோப்பைல தோத்து வெளியே போனாலும் போச்சு ஆளாளுக்கு அடுப்பு பத்த வச்சு அல்வா கிண்ட ஆரம்பிச்சுட்டாங்க. என் பையனை ஓபனிங் இறக்கியிருந்தா நல்லா ஆடியிருப்பான், இந்தியா ஜெயிச்சிருக்கும்னு ஷேவாகோட அப்பா ஒரு அல்வா குடுத்தாரு. முதல் சுற்றுல தோத்து வெளியே வரவரைக்கும் வாய் தொறக்காத சேப்பல், இந்த அணி தேர்வுல உடன்பாடில்லை, மூத்த வீரர்கள் ஒத்துழைக்கலைனு வரிசையா பவுண்ஸர் போட்டுகிட்டு இருக்காரு.

இந்த வரிசைல லேட்டஸ்டா சேர்ந்திருக்கறது ஜீ(Zee) டி.வியை சேர்ந்த சுபாஷ் சந்திரா. Indian Cricket Leagueனு ஒரு புது திட்டத்தை தொடங்கப்போறதா சொல்லியிருக்காரு இவர். இதுக்கான அனுமதி வேண்டி பிசிசிஐக்கு லெட்டர் அனுப்பிச்சிருக்காங்க. பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷா இது பத்தி சீக்கிரம் முடிவெடுப்போம்னு சொல்லியிருக்காரு. இந்தியால நடக்கற உள்நாட்டு போட்டிகளான ரஞ்சி, இரானி, சேலஞ்சர் போட்டிகள் மாதிரி இதுவும் நடத்தப்படும்னு சொல்லியிருக்கு Zee டி.வி குழுமம்.

முதல் கட்டமா இதுல 100 கோடி ரூபாய் முதலீடு பண்ணப்போறாங்க. பதினாலு பேர் கொண்ட ஆறு லீக் அணிகள் உருவாக்கப்படும். இதுல ரெண்டு பேர் இந்திய அணியில விளையாடுற இல்ல விளையாடுனவங்க இருப்பாங்க. நாலு வெளிநாட்டு வீரர்களும் எட்டு இளம் வீரர்களும் இருப்பாங்க. கொஞ்ச கொஞ்சமா மூனு வருஷத்துல இது பதினாறு அணிகளா உயர்த்தப்படும். பிசிசிஐ தேர்வுக்குழு தகுந்த வீரர்கள் இல்லாம தடுமாறுறதை மனதில் கொண்டு இது தொடங்கப்பட்டதாகவும், பிசிசிஐ இந்த லீக்ல இருந்து எந்த வீரரை வேணும்னாலும் தேர்வு செஞ்சுக்கலாம்னும் சொல்லியிருக்காங்க (வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாமா ? ). ஒவ்வொரு மாநிலத்திலயும் இதுக்கான திறனாய்வுக்குழு அமைக்கப்ப்படும்னும், ஒவ்வொரு வீரரோட ஆட்ட விவரங்கள், குணாதிசயங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் பதிவு செய்யப்படும்னும் சொல்லியிருக்காங்க.

The finer points of ICL:

- 6 teams or clubs to play in the opening year
- Talks on with BCCI for gaining access to stadiums
- Executive Board of the league under installation
- Pool of referees and umpires to be created
- Rules committee to form regulations for ICL
- Ombudsman to look into grievances of players
- League to begin with Twenty20 format and move to ODI format
- League to be a joint venture between Essel Group and ILFS Group
- Each team to have a mentor, media manager, psychologist, physio
- Prize money for the winner- US$ 1 million
- League teams to compete with teams internationally
- Number of teams to be increased from 6 to 16 in three years


நன்றி : Cricinfo.com

இப்போ மனசுல தோனுற கேள்விகள் ....

இது போன்ற தனியார் லீக்குகள் தாக்குபிடிப்பது சாத்தியமா?

இப்போட்டிகளுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா?

பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பிசிசிஐ இதன் மூலமும் காசு சம்பாதிக்க முயலுமா?

இதில் விளையாட திறமையான வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா? அல்லது பெயருக்காக சோப்ளாங்கி வெளிநாட்டு வீரர்கள் அழைத்து வரப்படுவார்களா?

இந்திய மைதானங்களை வெளிநாட்டு மைதானங்கள் போல் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றி நமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல், இதுபோல் நூற்றுக்கணக்கான வீரர்களை உருவாக்குவது மட்டுமே பலன் தருமா?

பிசிசிஐன் அணியில் உள்ள வீரர்கள் இதில் விளையாட பிசிசிஐ அனுமதிக்குமா?

இதற்கான விடைகள் கொஞ்ச நாள்ல தெரியும். என்னோட கருத்து இந்த முயற்சி வெற்றி பெறுவது கஷ்டம் தான். இந்திய கிரிக்கெட்டில் புரளும் அரசியல்,மாநிலபற்று மற்றும் பணம் இதையும் சில மாதங்களில் திசை திருப்பி விடும் என்பது தான். இதுல எவ்வளவு திறமையான வீரர்களை உருவாக்குனாலும் பிசிசிஐ தேர்வுக்குழுவில் உள்ள மாநில மற்றும் வட்டார பாசம் அதை ஓரம்கட்டிவிடும்.

Monday, April 2, 2007

நாளைய தலைப்புச் செய்திகள்நாள் : ஏப்ரல் 3 , 2023

27 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு முற்படுத்தப்பட்டவர்கள் போராட்டம்.

இன்று 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

இது ஒரு கண்துடைப்பு பட்ஜெட் - அதிமுகவின் தலைவர் டி.டி.வி தினகரன் பேட்டி

2026ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் - காங்கிரஸ் தலைவர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி.

சினிமாவில் இரத்தத்தை காண்பிக்கக்கூடாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி உத்தரவு

இந்திய வேலைகளை அமெரிக்காவுக்கு அவுட்சோர்சிங் செய்வதை எதிர்த்து இந்திய கனினிப் பொறியாளர்கள் கட்சி போராட்டம்.

தனுஷ்-ஐஸ்வர்யா மகனும், ஜோதிகா-சூர்யா மகளும் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்.

தண்ணீரின் விலை இன்று 24 ரூபாய் உயர்ந்து லிட்டருக்கு 865 ரூபாயாக இருந்தது.

தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.

பெர்முடாவுடனான நல்லுறவை வளர்க்கும் முயற்சியாக, அந்நாட்டிற்கான இந்திய தூதுவராக ஷேவாக் நியமனம்.

எல்லாம் ஒரு கற்பனைதாங்க :) யாருக்கு தெரியும் எதாவது நடந்தாலும் நடக்கலாம்.

டிஸ்கி : எல்லாம் ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது தாங்க. எதாவது முத்திரை குத்திடாதீங்க :)