Friday, March 2, 2007

வெல்லுமா இப்படை - 3 ???


முதலிரண்டு பகுதிகளுக்கான தொடுப்பு

பகுதி 1

பகுதி 2சேமியா,பால்,முந்திரி, திராட்சை, சர்க்கரைன்னு எல்லாம் இருந்தாலும் சரியான நேரத்துல சரியான விகிதத்துல கலந்தா தான் நல்ல பாயாசம் கிடைக்கும் :). அதுமாதிரி நம்ம அணில இருக்கற ஒவ்வொருத்தரும் தனிப்பட்ட முறையில பல சாதனைகள் பண்ணியிருந்தாலும் இதுவரைக்கும் இந்தியா ஜெயிச்சத விட தோத்த மேட்சுங்க தான் அதிகம். இதுவரைக்கும் இந்தியா 643 ஒருநாள் போட்டிகள்ல விளையாடி 303 போட்டில தான் ஜெயிச்சிருக்கு.வெற்றி விகிதம் 47.12% தான். இதுவே ஆஸ்திரேலியா 60.96%மும் தென்னாப்பிரிக்கா 61.46% ஜெயிச்சிருக்காங்க. இதுக்கு காரணம் Team Work. சச்சின் மாதிரியோ,கங்கூலி மாதிரியோ திராவிட் மாதிரியோ சாதனை பண்ணவங்க இந்த அணிகள்ல இல்லை. இருந்தும் இவங்க தொடர்ந்து ஜெயிக்க காரணம் ஒரு குழுவா விளையாடறது, தன்னம்பிக்கை மற்றும் ஈடுபாடு. இதெல்ல்லாம் நம்ம அணில இல்லைனு சொல்ல வரலை. கம்மின்னு சொல்றேன். மத்த எந்த அணியை விடவும் நம்ம அணில தான் 45 வந்ததும் இல்லன்னா 90 வந்ததும் மெதுவா தட்டி தட்டி ஆடறவங்க அதிகம். இது யாராலும் மறுக்க முடியாத ஒன்னு. இப்போ இது கொஞ்சம் குறைஞ்சிடுச்சுனாலும் இன்னும் இருக்கு.

அடுத்தது தேவையில்லாத Mind Block. இந்த அணிய ஜெயிக்கறது கஷ்டம், இந்த பவுலரை அடிக்கறது கஷ்டம்னு தேவையில்லாத எண்ணங்களையும் பயத்தையும் வளர்த்துக்கறது. ஒவ்வொருத்தரும் அவங்க இயல்பான் ஆட்டத்தை ஆடுனாலெ போதும்.உதாரணமா 4வது ஒருநாள் போட்டில 4 விக்கெட் விழுந்து இலங்கை தடுமாறுன பொழுதும், சமர சில்வா தன்னோட இயல்பான ஆட்டத்தை ஆடி அணிய நல்ல நிலைமைக்கு கொண்டு போனார். ஐயோ 4 விக்கெட் போயிடுச்சே, அடுத்த 15 ஓவார்க்கு தட்டி தட்டி ஆடி விக்கெட்ட காப்பாத்தலாம்னு இருந்தா, விக்கெட் இருக்கும் ரன் இருக்காது. ஒரேயடியான டிஃவென்ஸிவ் போக்கும், ஒரேயடியான அஃவென்ஸிவ் போக்கும் ஆபத்து. இயல்பான ஆட்டம் தான் கைகொடுக்கும். மறுபடியும் இதெல்லாம் நம்ம அணில இல்லனு சொல்லலை. கம்மின்னு சொல்றேன்.மனோரீதியான நம்பிக்கை அவசியம். ஜெயிக்கனும்கற வெறி வேணும்.

அடுத்து பவுலிங்கை பற்றி பார்க்கலாம்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்கள் கும்ப்ளே,ஹர்பஜன் சிங்,பதான்,ஜாகிர் கான்,அகர்கர்,ஸ்ரீசாந்த் மற்றும் முனாஃப் படேல்.

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள இந்தியர் அனில் கும்ப்ளே. அனுபவம் இவரது பலம். மேலும் மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள Slow Pitches இவரது பவுலிங்குக்கு உதவுமா என்பது சந்தேகமே. சுழற்பந்து வீச்சாளராக அடையாளம் காணப்பட்டாலும் இவர் வீசும் பந்துகள் மிதவேகமானவை. 1993-2000 வரை உச்சத்திலிருந்தவர் இவர். கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வந்தாலும் இந்த 7 ஆண்டுகளில் இவர் 259 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 61 போட்டிகளில் மட்டுமே விளையாடி 61 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது கவலைக்குரிய விஷயம். உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு முன் மீண்டும் சிறப்பாக விளையாடி அணிக்கு கோப்பையை பெற்றுதருவாரா என்பது சந்தேகமே. தொடர்ந்த இடைவெளி மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் மைதானங்கள் இவருக்கு எதிராக அமையக்கூடும்.

அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் இறங்குமுகத்திலேயே உள்ளார். 3.85, 4.12, 4.16, 4.25 என இவரது எகானமி ரேட் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவது வருத்தமான விஷயம். கடந்த ஆண்டு 13 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் இவர் முழு ஃபார்மில் இல்லை என்றே தோன்றுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேற்கிந்தியத்தீவுகளின் மைதானத்தில் தங்களின் இடத்தை தக்கவைத்துக் கொள்ள கும்ப்ளேயும் சிங்கும் சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே முடியும். தனது தூஸ்ராக்களாலும் ஆஃப் ஸ்பின்னாலும் எதிரணியை சுருட்டி கோப்ப்பையை வென்று தருவாரா எனப் பார்ப்போம்.

அடுத்து பதான். சமீபத்தில காயம் காரணமா இவரும் கொஞ்ச போட்டில விளையாடலை. அப்புறம் தியோதர் போட்டில இவர் ஆடறதை பொறுத்து தான் முடிவு செய்வேம்னு சொல்லி வெங்க்சர்கார் தேவையில்லாத பரபரப்பை உண்டாக்கினாரு. இந்தியாவின் சிறப்பான ஸ்விங் பவுலர்கள்ல இவரும் ஒருத்தர். மூனாவதா களமிறங்கி ரன்களும் அடிச்சுக் கொடுத்திருக்காரு. பயிற்சியாளர் சாப்பல் இவருக்கு இன்னம் அதிகமா பேட்டிங் பயிற்சி கொடுத்து முழுநேர ஆல்-ரவுண்டரா ஆக்குனா இவருக்கும் நல்லது அணிக்கும் நல்லது.இந்தியாவோட பெரிய குறைகள்ல ஒன்னு திறமையான ஆல்-ரவுண்டர் இல்லாதது. சச்சின், கங்கூலி, ஷேவாக், யுவராஜ்னு நிறைய மட்டையாளர்கள் பந்து வீசினாலும் எல்லாரும் பகுதி-நேர பவுலர்கள் தான். அதிலும் சச்சினோட உடல்தகுதி காரணமா அவர் அதிகமா பந்து வீசுறதும் நல்லதில்லை. அதனால் பதான் நல்லா பேட்டிங் பண்ணா கார்த்திக்கை சேர்க்காம் இன்னொரு பவுலரை அணியில சேர்க்கலாம். போனவருஷம் 24 போட்டில 35 விக்கெட்டுகளை எடுத்த இவர் இந்த வருஷம் 7 போட்டில 1 விக்கெட் தான் எடுத்திருக்கர். ஃபார்ம்ல இல்லாத எல்லாரும் உலகக்கோப்பைக்கு முன்னால சரியான நேரத்துல ஆட ஆரம்பிச்சுட்டாங்க. இவர் உலகக்கோப்பைல இழந்த ஃபார்மை பிடிப்பாருன்னு நம்புவோம்.

இப்போதைக்கு நம்பிக்கை தரமாதிரி பந்து வீசரவங்கள்ல ஒருத்தர் ஜாகிர் கான். கவுண்டில விளையாடற அனுபவம் இவருக்கு நல்லா கைகொடுக்குது. இந்த அனுபவத்தை உலகக்கோப்பைக்கும் உபயோகிப்பருன்னு நம்புவோம். இந்த தடைவை வேகமா வீசுறத விட அடிக்கடி வேகத்தை கூடி குறைச்சு வீசுறதுதான் பலன் தரும். அதனால் நான் நிறைய 'Slow Ball' போடப்போறேன்னு சொல்லியிருக்காரு. இவரோட திட்டம் பலிச்சு நெறைய விக்கெட்ட அறுவடை செஞ்சா சந்தோஷம் தான். போன உலகக்கோப்பைல 18 விக்கெட் எடுத்து கலக்குனாரு. இந்த தடவை கலக்குவாரா பார்ப்போம்.

அணியின் மற்றொரு அனுபவம் வாய்ந்த பவுலர் அகர்கர். இறுதி ஓவர்கள்ல ரிவர்ஸ் ஸ்விங் பண்ணக்கூடியவர். அடிக்கடி ஸ்லோ பால் போட்டு பேட்ஸ்மேனை குழப்பறவர். தன்னோட திறமைய நல்லா உபயோகிச்சா முன்னனி பவுலரா வரக்கூடியவர். இவரோட பலவீனம் நெறைய ரன் குடுக்கறது. இவரும் எப்பவாவது பேட்டிங்ல உதவுவார். கவனிக்கவும் எப்பவாவது. நடுவுல இறங்கு முகத்துல இருந்தவர் கடந்த ரெண்டு வருஷமா நல்லா ஆடற மாதிரி தோனுது. ஆனா முன்ன சொன்ன மாதிரி இவரோட எகானமி ரேட்டும் ஏறிகிட்டே வருது. ரன் குடுக்கறத கம்மி பண்ணா நல்ல எதிர்காலம் இல்லைனா அணியிலிருந்து தூக்கப்படர ஆவத்து இருக்கு.

தென்னாப்பிரிக்காவில தன்னோட பவுலிங்காலயும், டான்ஸாலயும் பேரு வங்கினவர் ஸ்ரீசாந்த். அந்த தொடருக்கு அப்புறம் ஒன்னும் சொல்லிக்கற மாதிரி பந்துவீசலை. Batting, Bowling, Fielding மாதிரி Sledgingம் கிரிக்கெட்ல புகழ்பெற்றது. பொதுவா இந்திய வீரர்கள் அவ்வளவா ஸ்லெட்ஜிங்குக்கு ரியாக்ட் பண்ணமாட்டாங்க. ஆனா ஆந்த்ரே நெல் ஒரு பந்து வீசி இவர் தடுமாறுனதும் ஒரு முறை முறைச்சாரு. ஸ்ரீசாந்த் அடுத்த பந்தை சிக்ஸ் அடிச்சிட்டு சரியான ஒரு ஆட்டம் போட்டாரு. அவரோட அந்த எதிர்ப்பை காட்டுர அந்த Attitude வரவேற்கவேண்டிய ஒன்னு. அதே வெறிய பந்துவீச்சுறதுலயும் காட்டுனா நல்லது. தென்னாப்பிரிக்கவுல விக்கெட் எடுத்த மாதிரி, நெறைய விக்கெட் எடுக்கனும்னு தேவையில்லாத முயற்சிகள் பண்ணதால தன்னால மறுபடியும் ஜொலிக்க முடியலை. இனிமே தேவையில்லாத முயற்சிகள் பண்றத விட்டுட்டு Line and Lengthல கவனம் செலுத்தப்போறேன்னு சமீபத்தில ஒரு பேட்டில சொல்லியிருந்தாரு. அதுமாதிரி தேவையில்லாத பரிட்சைகள் செய்யறத விட்டுட்டு பவுலிங்ல கவனம் செலுத்துனா அவருக்கும், அணிக்கும் நல்லது.

கடைசியா முனாஃப் படேல். இவரு நல்லா பந்து வீசுறதா (Line and Length) எனக்கு தோனுது. அமைதியான கட்டுப்பாடான ரன்-அப், நல்ல உயரம் எல்லாம் இவருக்கு ப்ளஸ் பாயிந்த். இவருக்கும் அவ்வலவு அனுபவமிலாதது ஒரு குறை. இதுவரைக்கும் 17 போட்டிகள்ல விளையாடி 22 விக்கெட் தான் எடுத்திருகாரு. இருந்தாலும் இவருக்கு நல்ல எதிகாலம் இருக்குனு நினைக்கிறேன். இந்த உலகக்கோப்பைல தன்னோட முழு திறமையையும் காட்டுவார்னு நம்பலாம். பதான், ஜாகிர்,அகர்கர்,ஸ்ரீசாந்த் மற்றும் முனாஃப்னு நெறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கறதால அணியில இடம்பிடிக்க போராடவேண்டி இருக்கும். மேற்கிந்திய மைதானங்கள் ஸ்ரீசாந்த விட இவருக்கு சூட் ஆகும்னு நினைக்கிறேன்.

இந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங்கை விட பவுலிங் சுமாரா தான் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் அனுபவம் வாய்ந்தவர்கள் ஃபார்மில் இல்லாம இருக்கரதும், நல்ல வீசரவங்க அனுபமில்லாம் இருக்கறதும் தான். அதே மாதிரி இன்ன்னொரு குறை திறமையான் 5வது பவுலர் இல்லாதது. முன்னமே சொன்ன மாதிரி சச்சின்,ஷேவாக்,கங்கூலி, யுவராஜ்னு எல்லாரும் இருந்தாலும் அவங்க போடற 10 ஓவர்ல 60 ரன் போச்சுன்னா பெரிய பின்னடைவா இருக்கும், சமீபத்தில நடந்த இலங்கை தொடரிலயும் அதுதான் நடந்தது. ஐந்து முழுநேர பவுலர்கள் அணியில சேர்த்தா பேட்டிங் பலவீனமாகும். பதானுக்கு பேட்டிங் பயிற்சி தந்து ஆல்-ரவுண்டராக்குறது நல்ல தீர்வு.

அடுத்த பலவீனம் தடுப்பாட்டம். மத்த அணிகளோட ஒப்பிடும் பொழுது இந்திய அணியின் தடுப்பாட்டம் சுமார் தான். ஃபீல்டிங்ல குடுக்கர ஒவ்வொரு ரன்னும், விடற ஒவ்வொரு கேட்சும் மட்டையாளர்களுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் அதிக பளுவை கொடுக்கும். இந்திய அவசரகதியில சரி பண்ண வேண்டிய ஒன்னு ஃபீல்டிங். இந்தியால சொல்லிக்ற மாதிரி ஃபீல்டிங் பண்ற ஒரே ஆளு யுவராஜ் தான். கார்த்திக் பரவாயில்லை. மத்தவங்க இம்ப்ரூவ் பண்ணனும். அதேமாதிரி கீப்பிங்க்ல டோனியும் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணனும். இலங்கைக்கு எதிரான தொடரில் பிடிக்கவேண்டிய ரெண்டு மூனு கேட்ச்களை தவறவிட்டார். அவரோட பேட்டிங் அணிக்கு பலம்னாலும், கீப்பிங்கையும் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணா வெற்றி நிச்சயம் தான்.

ரொம்ப நீளமான பதிவுன்னு நினைக்கிறேன். "போதும்..இத்தோட நிறுத்திக்குவோம்"னு யாராவது சொல்றதுக்கு முன்ன நானே நிறுத்திக்கறேன்.

முதல் சுற்றில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு - அடுத்த பகுதியில்.உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.


Thursday, March 1, 2007

வெல்லுமா இப்படை - 2 ???
இந்திய அணி பற்றிய ஒரு அலசல்..

முதல் பகுதிக்கான தொடுப்பு இங்கே

அடுத்து யுவராஜ் சிங்.இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும் மற்றொருவர் யுவராஜ். இவரும் கைஃபும் சேர்ந்து நேட்வெஸ்ட் கோப்பையோட இறுதி ஆட்டத்தில இங்கிலாந்துக்கு எதிரா அபாரமா ஆடி கோப்பைய வாங்கிக்குடுத்தது மறக்கமுடியாத ஒன்னு. அந்த போட்டில கங்கூலி சட்டைய சுழற்றி கொண்டாடுனதும் மறக்க முடியாதது. கடந்த ஒரு மாசமா காயம் காரணமா ஆடலைனாலும், இலங்கைக்கு எதிரான கடைசி போட்டில பிரமாதமா ஆடுனாரு. உலகக்கோப்பைக்கு போற நேரத்துல இப்படி எல்லாரும் ஃபார்ம்ல இருக்கறது சந்தோஷமான விஷயம். ஆனா இந்திய மைதானங்களும், மேற்கிந்திய மைதானங்களும் முற்றிலும் வேறானவை. இந்தியால முக்கால்வாசி மைதானங்கள் பேட்ஸ்மெனுக்கு சாதகமா இருக்கும். ஆனா மேற்கிந்தியதீவுகள்ல அப்படி இல்லை. முக்கால்வாசி Slow Pitches தான். பந்து சரியா பேட்டுக்கு வராது. பொறுமையும் திறமையும் மட்டுமே கைகொடுக்கும். அந்த ரெண்டுமே இவர்கிட்ட இருக்கு. தொடக்க ஆட்டக்காரர்கள் 15 ஓவர்ல 80, 90 ரன் எடுதாலும், அதை தொடர்ந்து அணியோட ஸ்கோரை 280, 300 னு கொண்டு போற பொறுப்பு திராவிட், யுவராஜ், டோனி மாதிரி மிடில் ஆர்டர் கைல தான் இருக்கு. யுவராஜ் கரை சேர்ப்பாரா இல்ல நட்டாத்துல கவுப்பாரா? கரைசேர்ப்பாருன்னு நம்புவோம்.

அடுத்து இந்திய அணியின் லேட்டஸ்ட் சென்சேஷன் டோனி. விக்கெட்-கீப்பர் மற்றும் பேட்ஸ்மெனான இவர் இலங்கய புரட்டி புரட்டி அடிச்ச 183 ரன்ன யாரும் மறந்திருக்க முடியாது. எந்த புத்தகத்துலயும் இல்லாத புதுமாதிரி ஷாட்ஸ் ஆடறதுல பேர்போனவரு. குறிப்பா 'ஹெலிகாப்டர்' ஷாட்னு சொல்லப்படற மட்டைய ஏடாகூடமான கோணத்துல சுத்தி இவர் அடிக்கற அழகே தனி. போன உலகக்கோப்பைல திராவிட்டே விக்கெட் கீப்பிங் பண்ணதால போட்டிக்கு ஏத்த மாதிரி ஒரு அதிகப்படியான பேட்ஸ்மெனையோ பவுலரையோ அணியில சேர்த்துக்க முடிஞ்சது. ஆனா இந்த தடவை சிறந்த பேட்ஸ்மெனான டோனி கீப்பராவும் இருக்கறதால பேட்டிங் இன்னும் வலுவாகுது. மூனாவது வீரரா களமிறங்கி இவர் நிரைய ரன் அடிச்சிருந்தாலும், இப்போதைக்கு ஆறாவதாகவோ ஏழாவதாகவோ இறங்குறது இந்தியா ஸ்லாக் ஓவர்ஸுனு சொல்லப்படற 40-50 ஓவர்கள்ல நெறைய ரன் அடிக்க உதவியாயிருக்கும். கடந்த 2 வருடங்களில் மொத்தமா ஒவ்வொரு அணியும் கடைசி பத்து ஓவர்கள்ல அடிச்ச ரன்கள் பட்டியல்ல இந்தியா 3வது இடத்துல இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் டோனிங்கறது என்னோட கருத்து.

உத்தப்பா. இந்திய அணியின் புது தொடக்க ஆட்டக்காரர். கங்கூலி-டெண்டுல்கர்க்கு அப்புறம் பலவித சோதனை பண்ணியும் இன்னும் ஒரு நிலையான தொடக்க ஜோடி அமையலன்னு தான் சொல்லனும். இப்போ சமீபமா உத்தப்பா தொடக்க ஆட்டக்காரரா விளையாட ஆரம்பிசிருகாரு. இவரோட பலம் இவர் புதுசுங்கரதால எதிரணியினருக்கு இவரை பத்தி அவ்வளவா தெரியாதது. அதுவுமில்லாம இவர்மேல நிறையா எதிர்பார்ப்புகளோ பாரங்களோ இல்லாதது. அதாவது அணியில நிறைய பேட்ஸ்மென் இருக்கறதால இவர் பொறுமையா நின்னு விளையாட வேணாம். இவர்கிட்ட எல்லாரும் எதிர்பார்க்கறது (அட்லீஸ்ட் நான்) போயி ஒரு காட்டு காட்டி 20 பந்துல நாப்பதோ அம்பதோ அடிச்சுட்டு பெவிலியன்ல ஹாயா ரெஸ்ட் எடுக்கலாம். இவர் எவ்வளவு வேகமா ரன் அடிச்சுத் தராறோ அவ்வளவு நன்மை இந்தியாவுக்கு. இதுதான் இவர்பற்றிய என்னோட கருத்து. மக்கள்ஸ் நீங்க என்ன நினைக்கிறிங்கனு தெரியல. இப்போ அடுத்த பிரச்சனை யார தொடக்க ஆட்டக்காரர்களா இறக்கறதுன்னு. கங்கூலி-உத்தப்பாவா, உத்தப்பா-ஷேவாகா, கங்கூலி-ஷேவகா? என்னொட சாய்ஸ் கங்கூலி-உத்தப்பா. எப்பவுமே ஒரு லெஃப்ட்-ரைட் காம்பினேஷன் பந்து வீச்சாளர்களுக்கு கஷ்டம் தான். அதுவுமில்லாம கங்கூலியும் ஷேவாகும் ஒரு 20 25 ஓவர் ஆடினாங்கன்னா, அடுத்து வர உத்தப்பாவுக்கு அடிச்சு ஆடரது கஷ்டம். இவர் கொஞ்சம் புதுசுங்கறதாலயும் இவரோட 'Game Style'லாலயும் சர்வதேச அளவுல பொறுமையா நின்னு விளையாடறது சந்தேகம்தான். அதனால இவரோட திறமையா சரியா பயன்படுத்த இவர முதல்ல ஆடவிடறதுதான் சரி.

அடுத்து தினேஷ் கார்த்திக். புதுவரவான இவரும் நல்ல திறமையான் ஆளுதான். ஆனா இன்னும் தன் திறமைய முழுசா காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கல. இலங்கைக்கு எதிரான கடைசி போட்டில இவர மூனாவதா இறக்கி டெஸ்ட் பண்ணாங்க. எனக்கென்னவோ இவர் ஏழாவதா வர்ரது தான் சரினும் தோனுது. அதுவுமில்லாம இவர கூடுதல் விக்கெட்-கீப்பரா வச்சிருக்காங்க.இதுவரைக்கும் 13 போட்டில விளையாடி 18.75 என்ற சராசரியோட 150 ரன்கள் அடிச்சிருக்காரு. சமீபத்துல மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரா அடிச்ச 63 ரன்கள் தான் இவரோட அதிகபட்ச ஸ்கோர். திறமையானவர்னாலும் வெறும் 13 போட்டில ஆடினத வச்சு எதுவும் சொல்றது கஷ்டம். இவரை பத்தி அதிகமா அப்புறம் பந்துவீச்சாளர்களை பத்தி அலசும்பொழுது பார்ப்போம்.

மீதி அடுத்த பதிவில்...

உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.

வெல்லுமா இப்படை - 1 ???


இப்படை தோற்கின் எப்படை வெல்லும், சென்று வருக வென்று வருக, GOOD LUCK INDIAன்னு எல்லாரும் விதவிதமா வாழ்த்தி நம்ம பசங்களை வழியனுப்பி வச்சுட்டோம். நம்ம பசங்க கோப்பையோட வருவாங்களா இல்ல வெறுங்கையோட வருவாங்களானு பார்ப்போம்.

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம், முந்தைய கோப்பைகளில் இந்தியாவின் வெற்றிகள், இந்த கோப்பைல இந்தியாவோட வெற்றி வாய்ப்புனு பலதையும் அலசவே இப்பதிவு. 4 இல்ல 5 பகுதியா வரும்.

முதல் பகுதில இந்திய அணியோட பலம் மற்றும் பலவீனத்தை பார்க்கலாம். இது முழுக்க, முழுக்க என்னோட கருத்து. இதுல எதிர்கருத்து இருக்கறவங்க தாராளமா பின்னூட்டத்தில துப்பிட்டு போங்க. எதையும் தாங்கும் இதயமும் முகமும் எங்கிட்ட இருக்கு :))


இப்போன்னு இல்லாம பலகாலமா (குறிப்பா சச்சின் காலத்துல இருந்து) இந்தியாவோட பலம் பேட்டிங் தான். அதுவும் இந்த தடவை உலகக்கோப்பை போற அணியில பேட்டிங்க் வரிசை ரொம்ப பலமா இருக்கு. சச்சின்,திராவிட்,கங்கூலி, யுவராஜ் சிங்,டோனி, ஷேவாக், உத்தப்பா,கார்த்திக்னு வரிசையா ஆட்டக்காரர்கள்.

சச்சின் கடந்த உலகக்கோப்பைகள் மாதிரி இந்த தடவையும் கலக்கினார்னா இந்தியாவுக்கு யானை பலம். ஆனா இவரோட ஃபிட்னஸ் தான் அப்பப்ப கால வாரி விடுது.அதுவுமில்லாம கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் விளையாடின தளர்ச்சியும் தெரியுது. இதுதான் இவர் ஆடர கடைசி உலகக்கோப்பையா இருக்கும். இன்னமும் இவர மட்டும் நம்பாம மத்தவங்களும் கொஞ்சம் பாரத்தை சுமந்தா நல்லாயிருக்கும். சமீபகால போட்டிகள்ல இவர் சீக்கிரம் அவுட்டாகியும் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், இவர் அவுட்டான உடனே அவ்வளவு தாண்டா இந்தியா, எல்லாரும் வரிசையா அவுட்டாகப் போறங்கன்னு எல்லாரோட(இல்லன்ன என் மனசில) மனசிலயும் தோணறது நெஜம். எல்லாராலயும் பாரட்டப்பெற்றவர், 10 பதிவு போட்டாலும் எழுதமுடியாத அளவுக்கு சாதனைகள் செஞ்சவர், தன் கிரிக்கெட் வாழ்க்கைல இந்தியா உலகக்கோப்பையை ஜெயிக்கறத பார்க்காம போனா மிகவும் வருந்தவேண்டிய விஷயம். அதுக்காகவாவது இவர் இந்த தடவை நமக்கு உலகக்கோப்பையை வாங்கித் தருவாருன்னு நம்புவோம். COME ON,SACHIN.

இவருக்கு அடுத்து 'தாதா'கங்கூலி. எனக்கு மிகவும் பிடித்தவர்கள்ல ஒருத்தர். விடாமுயற்சி, நம்பிக்கை வெற்றி தரும்னு ரெண்டு தடவை நிருபிச்சவரு. முதல்முதலா ஆஸ்திரேலியாவுக்கு எதிரா 1991ல் ஒரெஒரு ஒருநாள் போட்டில விளையாடினாரு. அதுக்கப்புறம் தேர்வுக்குழுவோட வழக்கமான கூத்தால கழட்டி விடப்பட்டார். அதுக்கப்புரம் 1996-97 இந்கிலாந்துக்கு எதிரா மறுபடியும் விளையாடி முதல் டெஸ்ட்லய 100 அடிச்சு அணியில நிரந்தரமா இடம்பிடிச்சாரு. திரும்பவும் அக்டோபர் 2005ல மோசமான பேட்டிங் காரணமா நீக்கப்பட்டாரு. இப்போ மறுபடியும் லோக்கல் போட்டிகள்ல தன் திறமைய நிருபிச்சு அணிக்குள்ள வந்தாரு. இலங்கக்கு எதிரான தொடரில ஆட்டநாயகன் விருதையும் வாங்கி அசத்துனாரு. இப்போ இருக்கற ஃபார்ம் உலகக்கோப்பைலயும் தொடர்ந்தா நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. முன்னமாதிரி விலகிப்போற பந்தை அடிக்க முயற்சிக்காம, கொஞ்சம் பொறுமையா கட்டுப்பாட்டோட ஆடர மாதிரி தோனுது. இந்த தடவை இவர் கண்டிப்பா நல்ல ஆடுவாரு, ஆடனும், ஏன்னா திரும்ப அணிக்குள்ள வரது நடக்காத காரியம். நீளம் குறைவா தோளளவுக்கு எழும்பி வர பந்துகள் தான் இந்தியா பேட்ஸ்மென்களுக்கு எப்பவுமே எதிரி. அதுபோன்ற பந்துகலையும் சிறப்பா ஆட பயிற்சி எடுத்துகிட்டாருன்னா ஏப்ரல் 29ம் தேதி 'இந்தியா உலகக்கோப்பையை வென்றது'னு பதிவ போட்டுடலாம்.

அடுத்து வருவது நம்ம 'WALL' திராவிட். உலகளவுல டெக்னிகலி சிறந்த பேட்ஸ்மென்கள்ல இவர் ஒருத்தர். கங்கூலியும் இவரும் ஒன்னா அறிமுகமானங்க. ரெண்டு பேரும் கலக்கிட்டு இருக்காங்க. ஒருநாள் போட்டிக்கெல்லாம் இவரு லாயக்கில்லை, டெஸ்டுக்கு தான் சரின்னும் பலரும் சொன்னப்ப அதை உடைச்சு தன்னால் ஒருநாள் போட்டிலயும் சாதிக்க முடியும்னு நிருபிச்சாரு. இவர் மிடில் ஆர்டர்ல ஆடறது அணிக்கு ஒரு ஸ்திரத்தன்மைய தரும். முதல் 15 ஓவர் அடிச்சு ஆடனப்புரம் பொறுமையா அதே சமயம் சரியான அளவு ரன்களும் சேகரிக்க இவர் மாதிரி ஆளுங்க தேவை. தேவைப்பட்டா அடிச்சும் ஆடறது இவரோட பெரிய பலம். கடந்த தொடரில 10,000 ரன்னை கடந்து சாதனை பண்ணாரு. உலகளவுல 10,000 ரன்கள் அடிச்ச ஆறு பேரில மூனு பேர்(சச்சின், கங்கூலி, திராவிட்) நம்ம அணில இருக்கறதே நம்ம அணியோட பேட்டிங் திறமைக்கு சாட்சி. இருந்தாலும் எல்லாரும் ஒரு அணியா சேர்ந்து விளையாடினால் தான் வெற்றிபெற முடியுங்கறதுக்கும் நம்ம அணியே சாட்சி :)).

ஏனோ அடிக்கடி சித்து வர்ணனைல சொன்னதா எங்கேயோ படிச்சது ஞாபகத்துக்கு வருது. இந்திய அணி சைக்கிள் ஸ்டாண்ட் மாதிரி.ஒரு சைக்கிள் விழுந்தா வரிசையா எல்லா சைக்கிளும் விழுந்துடும். அந்த மாதிரி நெறைய தடவை நடந்தும் இருக்கு.அந்த மாதிரி இல்லாம எல்லாரும் ஒரு 30 இல்ல 40 அடிச்சாலே போதும். மீதிய பவுலர்கள் பாத்துக்குவாங்க.

அடுத்து ஷேவாக். ஆரம்ப காலங்கள்ல தன்னோட அதிரடி ஆட்டத்தால சச்சின் அளவுக்கு பரபரப்பா பேசப்பட்டவர். அதிரடி மட்டும் பத்தாது கொஞ்சம் புத்திசாலித்தனமும் வேணும்னு கொஞ்ச நாள்ல புரிஞ்சிகிட்டாரு. சச்சினும், கங்கூலியும், திராவிட்டும் நல்லா ஆடும் பட்சத்துல இவர் அதிரடியா ஆடினாலெ போதும். இவரும் உத்தப்பாவும் சேர்ந்து 15 ஓவர்ல ஒரு 90 இல்ல 100 ரன் அடிச்சுக் குடுத்தாங்கன்னா அணிக்கு பெரிய பலமா இருக்கும். சமீபகாலமா இவர் ஃபார்மில இல்லாதது கவலையான விஷயம். அனுபவமிக்கவர், தடபுடானு ஒரு 20 பந்துல 40 ரன் அடிச்சாலும் உபயோகமா இருக்கும் போன்ற காரணங்களால இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன். செய்வாரா ஷேவாக் ??

பதிவோட நீளம் கருதி மீதி அடுத்த பாகத்துல..

உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.

பி.கு. கேக்காம படத்தை சுட்டதுக்கு சிவபாலன் மன்னிக்கவும்

Wednesday, February 28, 2007

விரலை வெட்டிக்கொள்ள தயார்!!!

நியூசிலாந்து அணியின் முன்னனி வீரர்களில் ஒருவரான் ஜேகப் ஓரம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகையில் காயமடைந்தார். இதனால் உலகக்கோப்பையில் இவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கையுறைக்குள் அணியும் வகையில் காயத்தை ஆற்றும் பட்டைகள் உள்ளன. ஆகவே என்னால் நன்றாக விளையாடமுடியும் என்ற நம்பிக்கையுள்ளது. வேறெந்த வழியும் இல்லாத பட்சத்தில் என் விரலை வெட்டிக்கொள்வது பலனளிக்கும் என்றால் அதற்கும் தயாராக உள்ளேன். ஆனால் உலகக்கோப்பையில் ஆடும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கேட்ச் பிடிக்கும் பொழுது இவரின்ன் இடதுகை மோதிர விரல் காயமடைந்த காட்சி..28 வயதான் இவர் இதுவரை 93 போட்டிகளில் விளையாடி 1382 ரன்கள் அடித்துள்ளார் மற்றும் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மருத்துவர்கள் இவர் முழுமையாக குணமடைய குறைந்தது நான்கு வாரங்களாவது ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.நியூசிலாந்து தனது முதல் போட்டியில் மார்ச் 16ம் தேதி இங்கிலாந்துடன் மோதுகிறது.


விரலை வெட்டிக்கொண்டு விளையாடுவது சுலபமான காரியமில்லை எனினும் இவரது மன உறுதியையும் நம்பிக்கையையும் பாராட்டுவோம்.


உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே


Tuesday, February 27, 2007

அசத்தப் போவது யாரு ???


போன வாரம் கேட்டிருந்த கேள்விகளுக்கு இதுவரைக்கும் 7 பேர் பதில் சொல்லியிருக்காங்க. 4 பேரு பதுங்கி(??) இருக்காங்க.

30 பின்னூட்டங்களுக்கு மேல உள்ள பதிவுகள் இனிமே அண்மையில் மறுமொழியப்பட்ட இடுக்கைகள் பகுதில வராதுங்கறதால இந்த பதிவு.

இதுவரை வந்துள்ள பதில்கள் கீழே...


Blogger Name12345678910ஸ்கோர்

சரியான விடைகள்

பாஸ்டன் பாலாPakistanPakistan, South Africa, West Indies, AustraliaMohammad YousufChaminda Vaasசூப்பர் 8SehwagKumblePakistanTendulkarGilchrist

மணிகண்டன்South AfricaIndia,South Africa,Australia,West IndiesSachin TendulkarMuralidharanSemi-FinalSachin TendulkarZaheer KhanAustraliaSourav GangulyAdam Gilchrist

Fast BowlerSouth AfricaSouth Africa, Newzeland, Australia & IndiaRicky PontingShane BondSemi FinalGangulyZaheer KhanAustraliaGilchristBoucher

அபுல்IndiaIndia,South Afica,Australia,Sri LankaSachin TendulkarShaun PollockFinalSachin TendulkarZaheer KhanSouth AficaJeyasuryaMark Boucher

மோகன்EnglandEngland, India,NewZealand, West IndiesSachin TendulkarAnil KumbleFinalSachin TendulkarAnil KumbleSouth AfricaCraig McMillanDhoni

அதிரடிWest IndiesWest Indies, South Africa, India, New ZealandSachin TendulkarShaun PollockSemi-FinalSachin TendulkarMunaf PatelSouth AfricaSourav GangulyMark Boucher

ஜி -zNew ZealandNew Zealand, Australia, India, West IndiesRicku PontingMuralidharanSemi-finalSourav GangulyIrfan PathanNew ZealandRicky PontingGilChrist
நீங்களும் பங்குபெற இங்கே க்ளிக்கவும்

பரிசுத்தொகை : 100 அமெரிக்க டாலர்.
பதில் சொல்ல கடைசி நாள் மார்ச் 11 2007 11:59PM PST.Australia's Greatest ODI Team


ஆஸ்திரேலியாவில் இதுவரை விளையாடிய வீரர்களிலிருந்து, ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணி நேற்று சிட்னியில் வெளியிடப்பட்டது. 1971லிருந்து இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 163 வீரர்கள் இதில் வாக்களித்தனர்.

இந்த அணியில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான ஆலன் பார்டர் இடம்பெறவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளரான சாப்பல் 12வது ஆளாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தலைசிரந்த வீரர்களில் ஒருவரான் ஸ்டீவ் வாஹ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2007 உலகக்கோப்பையில் பங்கேற்கவிருக்கும் அணியிலிருந்து நான்கு வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த அணியில் உள்ளவர்கள்

A Gilchrist
256 matches, 8561 runs, 376 catches, 37 stumpings

M Waugh
244 matches, 8,500 runs, 85 wickets

R Ponting
268 matches, 9,741 runs, 3 wickets

D Jones
164 matches, 6,068 runs, 3 wickets

S Waugh (capt)
325 matches, 7569 runs, 195 wickets

M Bevan
232 matches, 6,912 runs, 36 wickets

A Symonds
161 matches, 4,037 runs, 121 wickets

S Warne
194 matches, 1,018 runs, 293 wickets

B Lee
150 matches, 739 runs, 267 wickets

D Lillee
63 matches, 240 runs, 103 wickets

G McGrath
239 matches, 115 runs, 354 wickets


இவர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்
Player (votes)
Adam Gilchrist 110
Mark Waugh 101
Ricky Ponting (vc) 107
Dean Jones 80
Steve Waugh (c) 72
Michael Bevan 83
Andrews Symonds 74
Shane Warne 109
Brett Lee 57
Dennis Lillee 89
Glenn McGrath 109
Greg Chappell (12th) 40
உலகக்கோப்பை பரிசுப்போட்டிக்கான கேள்விகள்


Monday, February 26, 2007

GOOD LUCK INDIA ! ! !

வரும் புதனன்று உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணி வெற்றிவாகை சூடி உலகக்கோப்பையுடன் திரும்பி வர வாழ்த்துக்கள் !!!
சென்ற முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்தியா இம்முறை இன்னும் ஒருபடி மேலே சென்று கோப்பையை வெல்லட்டும்.
GOOD LUCK INDIA !!!வாருங்கள் நண்பர்களே நீங்களும் வாழ்த்திச் செல்லுங்கள்..

உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே

பாகிஸ்தான் அணியினருக்கு ஊக்கப்பரிசுகள் அறிவிப்புஉலகக்கோப்பையில் பங்கேற்கவிருக்கும் பாகிஸ்தான் அணியினருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊக்கப்பரிசுகளை அறிவித்துள்ளது.பாகிஸ்தான் கோப்பையை வென்றால் அணியிலுள்ள 15 வீரர்களுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும்.

அணியில் உள்ள வீரர்களை உற்சாகப்படுத்தவே இந்நடவடிக்கை.மேலும் பாகிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற்றால் ஒவ்வொரு வீரருக்கும் 20,000 டாலர்களும், அரையிறுதியில் வெற்றி பெற்றால் 25 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சலீம் அட்லஃப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான அக்தர் மூட்டு வலி காரணமாக் தான் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் இது போன்ற பரிசுத்தொகை எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.

நீங்களும் பரிசு பெற இங்கே ஒரு வாய்ப்பு..

Sunday, February 25, 2007

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பங்களாதேஷ்


என்னங்க நம்ப முடியலையா? ஆனா இது கண்டிப்பா நடக்கப்போகுதுன்றாரு ஒரு கிரிக்கெட் ரசிகர்.எப்படின்னு காரணத்தையும் அவரே சொல்றாரு பாருங்க

1996 உலகக்கோப்பை ஃபைனல்ல ஆஸ்திரேலியாவும் இலங்கயும் மோதினாங்க.அதுல இலங்கை ஜெயிச்சு கப்பையும் வின் பண்ணாங்க. அதுக்கடுத்து 1999 ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் விளையாடி ஆஸ்திரேலியா வின் பண்ணாங்க.போன உலகக்கோப்பை இருதி ஆட்டத்துல ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆடுனாங்க. இதெல்லாம் தெரிஞ்ச விஷயந்தான்.ஆக கடைசி மூணு இறுதி ஆட்டத்திலயும் ஆஸியும் தெற்காசிய அணி ஒன்னும் தான் மோதியிருக்கு.அதுபடி பாக்கியிருக்கற தெற்காசிய அணி பங்களாதேஷ் தான். அதனால இந்த தடவை இறுதி ஆட்டத்தில இந்த ரெண்டு அணியும் தான் ஆடப்போகுதுன்னு சொல்றாரு. யாரு ஜெயிப்பாங்கன்னு சொல்லலை :))

இந்த காரணம் மட்டுமில்லாம் இன்னொரு காரணமும் சொல்றாரு இங்கே

ஆளாளுக்கு அவங்க யூகத்த சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நீங்களும் இங்கே வந்து சொல்லிட்டு போங்க!!