Friday, March 9, 2007

இந்த ஆட்டம் போதுமா?? இன்னும் கொஞ்சம் வேணுமா?



சிங்கத்தை அதோட குகையிலய வீழ்த்துறதுனு சொல்ற மாதிரி இன்னைக்கு மேற்கிந்தியத்தீவுகளை அவங்க நாட்டுலயே கிழிச்சு நாராக்கி, துவச்சு காயப்போட்டு, அடிச்சு அலம்பல் பண்ணிட்டாங்க நம்ம பசங்க. அவங்க ஒரு 200,250 ரன் அடிச்சு இந்தியா அதை சேஸ் பண்ணியிருந்தா கூட இவ்வளவு பெரிசா இருந்திருக்காது. 85 ரன்னுக்கு சுருட்டி அதை 18 ஓவர்ல அடிச்சது தான் கலக்கல். ஆஸ்திரேலியா மாதிரி அவங்க பெரிய அணியில்லைன்னாலும் அவங்க ஊருல இப்படி தோற்கடிச்சது இந்தியாவுக்கு பெரிய சாதனை தான்.





டாஸ் வின் பண்ணி மேற்கிந்திய அணி முதல்ல பேட் பண்ண ஆரம்பிச்சாங்க. முதல்ல இருந்தே கொஞ்சம் தடவல் தான். தொடக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கின சந்தர்பாலும், கேலும் சீக்கிரமே அவுட்டாயி ரெஸ்ட் எடுக்க போயிட்டாங்க. அதுக்கப்புறம் சர்வானும் லாராவும் கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சாங்க. ஆனா அவங்களாலயும் நம்ம பவுலிங்குக்கு ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியலை. ஸ்கோர் 53 இருந்தப்ப லாரா அவுட்டானாரு. அதுக்கப்புறம் எல்லாரும் மடமடனு மொத்தமா 85 ரன்னுக்கு அவுட். இந்தியாவோட பேட்டிங் தான் பலம், பவுலிங் பலவீனம் தான்னு எல்லாருமே சொல்றப்ப (என்னையும் சேர்த்து) இன்னைக்கு இந்தியாவோட பவுலிங் மிகத் தரமானதா இருந்தது. இந்த அளவு வேணாம்,இதுல 70% போட்டாலே போதும். இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. இதே மாதிரி எல்லா பிட்சும் கைகொடுக்குமானு தெரியலை. முனாஃப் படேல் 6 ஓவர் போட்டு 10 ரன் குடுத்து 4 விக்கெட் வீழ்த்தினாரு. அடுத்து பதான் 3 விக்கெட் எடுத்தாரு. மொத்தத்துல எல்லாருமே நல்லா போட்டாங்கனு தான் சொல்லனும்.





இந்தியா சுலபமா ஜெயிக்கும்னு தெரியும். அதே மாதிரி சுலபமா 18.3 ஓவர்ல 1 விக்கெட் இழப்போட ஜெயிச்சாங்க. அவுட்டானவர் ஷேவாக். இவரோட எதிர்காலம் இப்போ பயங்கர கேள்விக்குறியா இருக்கு. திராவிட் சொன்னதால தான் அணியில சேர்த்தோம்னு வெங்க்சர்கர் வேற சொல்லி சூட்டை கிளப்பியிருக்காரு. இது திராவிடுக்கு கூடுதல் தலைவலி. ஷேவாகை இப்போ முக்கியமான போட்டில சேர்க்கறதா வேண்டாமனு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க திராவிட்டும் சாப்பலும். அதே மாதிரி சமீப போட்டிகள்ல தினேஷ் கார்த்திக்கை மூனாவதா இறக்கி சோதனை பண்றாங்க. இதெல்லாம் பார்க்கும் போது அநேகமா உலகக்கோப்பை போட்டிகள்ல கங்கூலியும் உத்தப்பாவும் ஓபன் பண்ணுவாங்க, கார்த்திக் மூனாவதா வருவாருன்னு நினைக்கிறேன். ஷேவாக்குக்கு இன்னும் 2 வாய்ப்பு இருக்கு. பங்களாதேஷ், பெர்முடா அணிகளுக்கு எதிரான முதல் ரெண்டு போட்டில அவருக்கு வாய்ப்பு குடுத்து பார்க்கலாம். அப்பவும் ஆடலைன்னா ரிடர்ன் டிக்கெட் எடுத்து குடுக்க வேண்டியது தான். இலங்கைக்கு எதிராகவோ , சூப்பர் 8லயோ அவர வச்சு பரிசோதனை பண்ண முடியாது. இந்த பயிற்சி போட்டிகள் அவருக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு. வீனாக்கிட்டாரு. Best of Luck Sehwag.






ஷேவாக் அவுட்டானதும் உத்தப்பாவும், கார்த்திக்கும், நிதானமா கவனிச்சு அதே சமயத்தில அடிக்க வேண்டிய பந்துகளை அடிச்சு இந்தியா 18.3 ஓவர்ல ஜெயிக்க உதவினாங்க. கார்த்திக் 38 ரன்னும் உத்தப்பா 35 ரன்னும் எடுத்து அவுட்டாகாமா இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில ஜெயிக்க வச்சாங்க. ஆக மொத்தம் இது பயிற்சி ஆட்டம்னாலும், மத்த அணிகளுக்கு இது இந்தியா அடிச்ச எச்சரிக்கை மணி

Come On Boys, Keep Going

Thursday, March 8, 2007

மறக்க முடியுமா - 3

சச்சினின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கோகோ கோலா கோப்பைக்காக 1998ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டி ஆகும். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பங்கேற்ற இத்தொடரில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்தியா. தோல்வியுற்றாலும் மிகக்குறைந்த வித்தியாசத்தில் தோற்றால், சிறந்த ரன்ரேட் விகிதப்படி இறுதிப்போட்டிக்கு நுழையமுடியும்(இது தான் எப்பவும் நடக்கறதாச்சே :-D ) என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா களமிறங்கியது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியனர் தொடக்கம் முதலே அடித்து விளையாடி 50 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தனர். மார்க் வாஹ் 81 ரன்களும் பெவன் 101 ரன்களும் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி, அடித்து ஆடிய போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. 138 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுதும், சச்சின் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியினரை துவம்சம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராமல் வீசிய மனற்புயலால் ஆட்டம் தடைப்பட்டது.

பின்பு ஆட்டம் துவங்கியபொழுது இந்தியாவிற்கு 46 ஓவர்களில் 276 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 237 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன் பின் சச்சின் ஆடிய ஆட்டம் ஆஸ்திரேலியாவை மிரள வைத்தது. பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பந்து நாலாதிசையிலும் பறந்தது. சச்சின் 143 ரன்கள் எடுத்து (131 பந்துகள்,ஒன்பது 4,ஐந்து 6), தனியொருவராக இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உதவினார்.அன்று சச்சின் ஆடிய ஆட்டம் 'DesertStorm' என அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரது ரசிகர்களால் மறக்க முடியாத ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

அந்த ஆட்டத்தை பார்த்து ரசிக்க..



இதுபோன்ற சிறந்த ஒரு ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் சச்சின் மீண்டும் தருவார் என்று நம்புவோம்!!

Wednesday, March 7, 2007

இந்தியா Vs நெதர்லாந்து போட்டியின் வீடியோ

நேற்று நெதர்லாந்துடன் நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்தியா 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த போட்டியில் இந்திய இன்னிங்ஸின் தொகுப்பு உங்களுக்காக




முழுநீள வீடியோ தொகுப்பு (50 நிமிடங்கள்)






Tuesday, March 6, 2007

நியூசிலாந்து பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வி


'சற்றுமுன்'இல் வெளியான இப்பதிவு தமிழ்மணத்தில் தெரியாததால் மீண்டும் எனது பதிவில்..


இன்றைய பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணி, நியூஸிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த உலகக்கோப்பை, இம்முறை பயிற்சி ஆட்டங்களிலேயெ ஆச்சரியங்களை தர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து 3 முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, உலகக்கோப்பையை வெல்லும் என் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான நியூஸிலாந்து தோற்றிருப்பது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியே!

மேலதிக விவரங்களுக்கு

இந்தியா 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


இன்று நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 182 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.





டாஸில் ஜெயித்த நெதர்லாந்ந்து இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஷேவாக்கும் கங்கூலியும் தொடக்க ஆட்டக்கரார்களாக களமிறங்கினர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 300 ரன்கள் அடித்தது. கேப்டன் திராவிட் 92 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக சச்சின் 59 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அடுத்தபடியாக 33 உதிரிகளே ! வேறு யாரும் 30 ரன்களை தாண்டவில்லை.





ஸ்ரீசாந்தும், முனாஃப் படேலும் பேட்டிங் செய்யவில்லை எனினும் பயிற்சி போட்டிகளின் சிறப்பு விதிகளின்படி பந்து வீச அனுமதிக்கப்பட்டனர்.118 ரன்களில் நெதர்லாந்து அணியினரின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 182 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சுலபமாக வென்றது. யுவராஜ் சிங் 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

முழு ஸ்கோர் விவரம்


மார்ச் 8ம் தேதி அடுத்த பயிற்சி போட்டியில் இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் மோதுகிறது.

Monday, March 5, 2007

முதல் சுற்றில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு -- வெல்லுமா இப்படை - 4???



எனது இப்பதிவு இன்றைய தமிழோவியத்திலும் வெளியாகியுள்ளது. அதற்கான சுட்டி


முந்தைய பகுதிகளுக்கான தொடுப்பு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3




இந்தியா, இலங்கை, பெர்முடா மற்றும் பங்களாதேஷ் அணிகள் க்ரூப் Bல இருக்கு. முதல் சுற்றுல இந்த நாலு அணிகளும் தங்களுக்குள்ள விளையாடும். முதல் இரண்டு இடத்தை பிடிக்கிற அணிகள் அடுத்த சுற்றான Super 8க்கு தகுதிபெறும். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.

இந்தியாவின் முதல் சுற்று போட்டிகளின் விவரம்
மார்ச் 17 - India Vs Bangladesh
மார்ச் 19 - India Vs Bermuda
மார்ச் 23 - India Vs Srilanka

எல்லா க்ரூப்புமே ரெண்டு பலமான அணி, ரெண்டு சற்றே அனுபவம் குறைந்த அணின்னு பிரிக்கப்பட்டிருக்கு. நம்ம க்ரூப்புல இந்தியாவும் இலங்கையும் பலம் வாய்ந்த அணிகள். பங்களாதேஷ் சமீபகாலமா நெறைய போட்டிகள்ல ஆடினாலும் சற்று பலவீனமான அணிதான். இருந்தாலும் இவங்களை அப்படி ஒரேயடியா ஒதுக்கிடவும் முடியாது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கைன்னு பலம் வாய்ந்த அணிகளை இவங்க ஜெயிச்சும் இருக்காங்க.

பெர்முடா இந்த உலகக்கோப்பைக்கு புதுவரவு. இவங்களை பத்தி அவ்வளவா ஒன்னும் தெரியாது. புதுவரவு தானேன்னு இவங்களையும் ஒதுக்க முடியாது. 1983 உலகக்கோப்பைல இதேமதிரி புதுவரவான ஜிம்பாப்வே முதல் போட்டிலயே ஆஸ்திரேலியாவை தோக்கடிச்சாங்க. இந்தியாவுக்கும் தண்ணி காட்டுனதை மறக்கமுடியாது. கபில்தேவ் 175 அடிச்சிருக்காட்டி நாமளும் தோத்திருப்போம். சமீபத்தில திராவிட் பேட்டில சொன்ன மாதிரி எந்த ஒரு அணியையும் சுலபமா எடைபோடக் கூடாது. கிரிக்கெட்ல என்னைக்கு எது நடக்கும்னு தெரியாது. 1996 உலகக்கோப்பைல கென்யா மேற்கிந்தியத்தீவுகளை 93க்கு சுருட்டினாங்க, 2003 உலகக்கோப்பைல அரைஇறுதி வரைக்கும் வந்தாங்க.

அதனால எந்த ஒரு அணியையும் சுலபமா எடைபோடக்கூடாது. இன்னோரு முக்கியமான் விஷயம், இந்த உலகக்கோப்பைல புது விதிகளின்படி முதல் சுற்றுல தகுதி பெறும் மற்ற அணிக்கு எதிரா எடுக்கற புள்ளிகள் இரண்டாவது சுற்றுக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சூப்பர் 8ல முதல் நாலு அணிகள் தான் அரைஇறுதிக்கு போகமுடியும். அதனால் முதல்சுற்றுல எல்லா போட்டிலயும் ஜெயிக்கறது ரொம்ப முக்கியம். ஒருபோட்டில தோற்கறதால் இழக்கற 2 புள்ளிகள் கோப்பைக் கனவையே கலைக்க வாய்ப்பிருக்கு. வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் 2 புள்ளிகளும், டை அல்லது கைவிடப்படும் போட்டிகளுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும். முதல் சுற்றின் இறுதியில் இரு அணிகள் சமமான் புள்ளிகள் பெற்றிருந்தால் கீழ்கண்ட வரிசையில் தகுதி பெறும் அணி தேர்ந்தெடுக்கப்படும்

1. அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி
2. அதிக னெட் ரன்ரேட் உள்ள அணி
3. அதிகமான விக்கெட் சராசரி (எடுத்த விக்கெட்கள்/வீசிய பந்துகள்) உள்ள அணி
4. அவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற அணி
5. இவை எல்லாவற்றிலும் சமமாக இருப்பின் 'லாட்' முறை


அதேமாதிரி புதுவிதிகளின்படி இரண்டாம் சுற்றுக்கு போகும் அணிகளின் எண்கள் ஐசிசியின் தரவரிசைப்படியே தீர்மானிக்கப்படும். அதாவது இந்தியா முதல் சுற்றுல எல்லா போட்டிலயும் ஜெயிச்சு புள்ளிகள் பட்டியல்ல முதல் இடத்தை பிடிச்சாலும், சூப்பர் 8 சுற்றுக்கு B2 ஆகவே செல்லமுடியும். ஏன்னா இலங்கை தரவரிசைல நம்மள விட முன்ன இருக்காங்க. சூப்பர் 8ல எப்படியிருந்தாலும் மத்த 6 அணிகளோடயும் விளையாடனும்னாலும், இந்த சிஸ்டத்தால போட்டிகளின் நாளும் இடமும் மாறும். இதுவும் ஒரு போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்கறதால் கவனிக்கனும். இப்போதைய தரவரிசைப்படி இலங்கை B1, இந்தியா B2. இதில் ஏதவது ஒருநாடு தகுதி பெறலைன்னா, தகுதிபெறும் நாடு அந்த இடத்தை எடுத்துக்கும். உதாரணமா இந்தியாவும், பங்களாதேஷும் சூப்பர் 8க்கு தகுதி பெற்றால், பங்களதேஷ் B1 எனவும் இந்தியா B2 எனவும் கருதப்படும். இலங்கையும் பங்களதெஷும் தகுதி பெற்றால் இலங்க B1 எனவும் பங்களாதேஷ் B2 எனவும் கருதப்படும்.

அடுத்ததா இந்தியா முதல்சுற்று போட்டிகளை ஆடப்போற மைதானம் பற்றி பார்ப்போம். முதல் சுற்றுல ஒவ்வொரு க்ரூப்பும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தீவில் மட்டுமே ஆடுகின்றன. அதன்படி இந்தியா தனது அனைத்து முதல் சுற்று ஆட்டங்களையும் Trinidad & Tobago தீவில் உள்ள Port of Spain'ன் Queen's Park Oval மைதானத்தில் விளையாட உள்ளது.




இது மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள பழமையான மைதானமாகும். அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்தியுள்ள பெருமையும் உடையது. 25,000 மக்கள் அமர்ந்து பார்க்கும் வசதியுடைய இம்மைதானம் இயற்கை அழகு கொஞ்சும் அழகான மைதானமாக கருதப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் ராசியான மைதானம் இது. இதுவரை இங்கு 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா 3 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. 1976ல் இங்கு நடந்த டெஸ்ட் போடியின் இறுதி நாளில் இந்தியா 406 ரன்கள் அடித்து வென்று சாதனை படைத்தது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் இந்தியா இங்கு 8 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது வருத்தமான விஷயம். இங்கு முதலாவதாக விளையாடி இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் 217 மட்டுமே என்பது அதைவிடவும் வருத்தமான விஷயம் இரண்டாவதாக விளையாடி இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் 236. மொத்தமாக இங்கு நடந்துள்ள 50 போட்டிகளில் 10 வீரர்கள் சதமடித்துள்ளனர். இதில் இந்தியர் யாரும் இல்லை. 16 பவுலர்கள் 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.
இதில் நான்கு பேர் சுழல்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

45.7% முதலில் ஆடியவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், 54.3% இரண்டாவதாக ஆடிய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஓவருக்கான சராசரி ரன்விகிதம் 4.69. ஒரு விக்கெட்டுக்கான சராசரி ரன் 29.44. பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் ஒருமுறையும், இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் ஒருமுறையும் ஆக இரண்டு முறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள மைதானங்களிலேயே சுழற்பந்துக்கு அதிகம் உதவக்கூடிய மைதானமாக இது கருதப்படுகிறது. இலங்கையின் முரளிதரன் இந்திய அணியினருக்கு கடும் தலைவலியாக இருப்பார் என்றே தோன்றுகிறது. முதல் சுற்றில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

பதிவின் நீளம் கருதி, மீதம் அடுத்த பகுதியில்...


பி.கு. தட்டி தடவி நானும் 50 அடிச்சிட்டேங்க..இது எனது 50வது பதிவு!!





உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.

உருவத்தை பார்த்து பயந்திடாதீங்கப்பு!!




இவர் பெர்முடா அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் Dwane Leverock. 35 வயதான இவரின் எடை 250 பவுண்ட்கள். இவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடதக்கது!






கென்யாவுக்கு எதிரான ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், இன்று இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 10 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.




உருவத்தை பார்த்து பயந்திடாதீங்க பசங்களா, நல்லா வெளுத்து வாங்குங்க!!

Breaking News in Rediff

Breaking News என்று ரீடிஃபில் இன்று வெளியாகியுள்ள செய்தி

ஏப்ரல் 15 இந்தியா-பாகிஸ்தான் மோதல்


இதை பற்றி போன மாதம் 20ம் தேதி வெளியான எனது பதிவு

Sunday, March 4, 2007

இந்தியா உலகக்கோப்பையை வென்றது!!!


இன்று நடந்த இறுதியாட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா இரண்டாம் முறையாக உலகக்கோப்பையை வென்றது.தனது நீண்ட நாளைய கனவு நனவானதாக கேப்டன் திராவிட் மகிழ்ச்சி.






மேல் விவரங்கள் கீழே.......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அடிக்க வராதீங்க:) ஏப்ரல் 28ம் தேதி போடப்போற பதிவுக்கு ஒரு சிறு முன்னோட்டம் :)) ரொம்ப ஓவரோ இது??