Friday, March 2, 2007

வெல்லுமா இப்படை - 3 ???


முதலிரண்டு பகுதிகளுக்கான தொடுப்பு

பகுதி 1

பகுதி 2



சேமியா,பால்,முந்திரி, திராட்சை, சர்க்கரைன்னு எல்லாம் இருந்தாலும் சரியான நேரத்துல சரியான விகிதத்துல கலந்தா தான் நல்ல பாயாசம் கிடைக்கும் :). அதுமாதிரி நம்ம அணில இருக்கற ஒவ்வொருத்தரும் தனிப்பட்ட முறையில பல சாதனைகள் பண்ணியிருந்தாலும் இதுவரைக்கும் இந்தியா ஜெயிச்சத விட தோத்த மேட்சுங்க தான் அதிகம். இதுவரைக்கும் இந்தியா 643 ஒருநாள் போட்டிகள்ல விளையாடி 303 போட்டில தான் ஜெயிச்சிருக்கு.வெற்றி விகிதம் 47.12% தான். இதுவே ஆஸ்திரேலியா 60.96%மும் தென்னாப்பிரிக்கா 61.46% ஜெயிச்சிருக்காங்க. இதுக்கு காரணம் Team Work. சச்சின் மாதிரியோ,கங்கூலி மாதிரியோ திராவிட் மாதிரியோ சாதனை பண்ணவங்க இந்த அணிகள்ல இல்லை. இருந்தும் இவங்க தொடர்ந்து ஜெயிக்க காரணம் ஒரு குழுவா விளையாடறது, தன்னம்பிக்கை மற்றும் ஈடுபாடு. இதெல்ல்லாம் நம்ம அணில இல்லைனு சொல்ல வரலை. கம்மின்னு சொல்றேன். மத்த எந்த அணியை விடவும் நம்ம அணில தான் 45 வந்ததும் இல்லன்னா 90 வந்ததும் மெதுவா தட்டி தட்டி ஆடறவங்க அதிகம். இது யாராலும் மறுக்க முடியாத ஒன்னு. இப்போ இது கொஞ்சம் குறைஞ்சிடுச்சுனாலும் இன்னும் இருக்கு.

அடுத்தது தேவையில்லாத Mind Block. இந்த அணிய ஜெயிக்கறது கஷ்டம், இந்த பவுலரை அடிக்கறது கஷ்டம்னு தேவையில்லாத எண்ணங்களையும் பயத்தையும் வளர்த்துக்கறது. ஒவ்வொருத்தரும் அவங்க இயல்பான் ஆட்டத்தை ஆடுனாலெ போதும்.உதாரணமா 4வது ஒருநாள் போட்டில 4 விக்கெட் விழுந்து இலங்கை தடுமாறுன பொழுதும், சமர சில்வா தன்னோட இயல்பான ஆட்டத்தை ஆடி அணிய நல்ல நிலைமைக்கு கொண்டு போனார். ஐயோ 4 விக்கெட் போயிடுச்சே, அடுத்த 15 ஓவார்க்கு தட்டி தட்டி ஆடி விக்கெட்ட காப்பாத்தலாம்னு இருந்தா, விக்கெட் இருக்கும் ரன் இருக்காது. ஒரேயடியான டிஃவென்ஸிவ் போக்கும், ஒரேயடியான அஃவென்ஸிவ் போக்கும் ஆபத்து. இயல்பான ஆட்டம் தான் கைகொடுக்கும். மறுபடியும் இதெல்லாம் நம்ம அணில இல்லனு சொல்லலை. கம்மின்னு சொல்றேன்.மனோரீதியான நம்பிக்கை அவசியம். ஜெயிக்கனும்கற வெறி வேணும்.

அடுத்து பவுலிங்கை பற்றி பார்க்கலாம்.





இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்கள் கும்ப்ளே,ஹர்பஜன் சிங்,பதான்,ஜாகிர் கான்,அகர்கர்,ஸ்ரீசாந்த் மற்றும் முனாஃப் படேல்.

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள இந்தியர் அனில் கும்ப்ளே. அனுபவம் இவரது பலம். மேலும் மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள Slow Pitches இவரது பவுலிங்குக்கு உதவுமா என்பது சந்தேகமே. சுழற்பந்து வீச்சாளராக அடையாளம் காணப்பட்டாலும் இவர் வீசும் பந்துகள் மிதவேகமானவை. 1993-2000 வரை உச்சத்திலிருந்தவர் இவர். கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வந்தாலும் இந்த 7 ஆண்டுகளில் இவர் 259 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 61 போட்டிகளில் மட்டுமே விளையாடி 61 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது கவலைக்குரிய விஷயம். உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு முன் மீண்டும் சிறப்பாக விளையாடி அணிக்கு கோப்பையை பெற்றுதருவாரா என்பது சந்தேகமே. தொடர்ந்த இடைவெளி மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் மைதானங்கள் இவருக்கு எதிராக அமையக்கூடும்.

அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் இறங்குமுகத்திலேயே உள்ளார். 3.85, 4.12, 4.16, 4.25 என இவரது எகானமி ரேட் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவது வருத்தமான விஷயம். கடந்த ஆண்டு 13 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் இவர் முழு ஃபார்மில் இல்லை என்றே தோன்றுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேற்கிந்தியத்தீவுகளின் மைதானத்தில் தங்களின் இடத்தை தக்கவைத்துக் கொள்ள கும்ப்ளேயும் சிங்கும் சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே முடியும். தனது தூஸ்ராக்களாலும் ஆஃப் ஸ்பின்னாலும் எதிரணியை சுருட்டி கோப்ப்பையை வென்று தருவாரா எனப் பார்ப்போம்.

அடுத்து பதான். சமீபத்தில காயம் காரணமா இவரும் கொஞ்ச போட்டில விளையாடலை. அப்புறம் தியோதர் போட்டில இவர் ஆடறதை பொறுத்து தான் முடிவு செய்வேம்னு சொல்லி வெங்க்சர்கார் தேவையில்லாத பரபரப்பை உண்டாக்கினாரு. இந்தியாவின் சிறப்பான ஸ்விங் பவுலர்கள்ல இவரும் ஒருத்தர். மூனாவதா களமிறங்கி ரன்களும் அடிச்சுக் கொடுத்திருக்காரு. பயிற்சியாளர் சாப்பல் இவருக்கு இன்னம் அதிகமா பேட்டிங் பயிற்சி கொடுத்து முழுநேர ஆல்-ரவுண்டரா ஆக்குனா இவருக்கும் நல்லது அணிக்கும் நல்லது.இந்தியாவோட பெரிய குறைகள்ல ஒன்னு திறமையான ஆல்-ரவுண்டர் இல்லாதது. சச்சின், கங்கூலி, ஷேவாக், யுவராஜ்னு நிறைய மட்டையாளர்கள் பந்து வீசினாலும் எல்லாரும் பகுதி-நேர பவுலர்கள் தான். அதிலும் சச்சினோட உடல்தகுதி காரணமா அவர் அதிகமா பந்து வீசுறதும் நல்லதில்லை. அதனால் பதான் நல்லா பேட்டிங் பண்ணா கார்த்திக்கை சேர்க்காம் இன்னொரு பவுலரை அணியில சேர்க்கலாம். போனவருஷம் 24 போட்டில 35 விக்கெட்டுகளை எடுத்த இவர் இந்த வருஷம் 7 போட்டில 1 விக்கெட் தான் எடுத்திருக்கர். ஃபார்ம்ல இல்லாத எல்லாரும் உலகக்கோப்பைக்கு முன்னால சரியான நேரத்துல ஆட ஆரம்பிச்சுட்டாங்க. இவர் உலகக்கோப்பைல இழந்த ஃபார்மை பிடிப்பாருன்னு நம்புவோம்.

இப்போதைக்கு நம்பிக்கை தரமாதிரி பந்து வீசரவங்கள்ல ஒருத்தர் ஜாகிர் கான். கவுண்டில விளையாடற அனுபவம் இவருக்கு நல்லா கைகொடுக்குது. இந்த அனுபவத்தை உலகக்கோப்பைக்கும் உபயோகிப்பருன்னு நம்புவோம். இந்த தடைவை வேகமா வீசுறத விட அடிக்கடி வேகத்தை கூடி குறைச்சு வீசுறதுதான் பலன் தரும். அதனால் நான் நிறைய 'Slow Ball' போடப்போறேன்னு சொல்லியிருக்காரு. இவரோட திட்டம் பலிச்சு நெறைய விக்கெட்ட அறுவடை செஞ்சா சந்தோஷம் தான். போன உலகக்கோப்பைல 18 விக்கெட் எடுத்து கலக்குனாரு. இந்த தடவை கலக்குவாரா பார்ப்போம்.

அணியின் மற்றொரு அனுபவம் வாய்ந்த பவுலர் அகர்கர். இறுதி ஓவர்கள்ல ரிவர்ஸ் ஸ்விங் பண்ணக்கூடியவர். அடிக்கடி ஸ்லோ பால் போட்டு பேட்ஸ்மேனை குழப்பறவர். தன்னோட திறமைய நல்லா உபயோகிச்சா முன்னனி பவுலரா வரக்கூடியவர். இவரோட பலவீனம் நெறைய ரன் குடுக்கறது. இவரும் எப்பவாவது பேட்டிங்ல உதவுவார். கவனிக்கவும் எப்பவாவது. நடுவுல இறங்கு முகத்துல இருந்தவர் கடந்த ரெண்டு வருஷமா நல்லா ஆடற மாதிரி தோனுது. ஆனா முன்ன சொன்ன மாதிரி இவரோட எகானமி ரேட்டும் ஏறிகிட்டே வருது. ரன் குடுக்கறத கம்மி பண்ணா நல்ல எதிர்காலம் இல்லைனா அணியிலிருந்து தூக்கப்படர ஆவத்து இருக்கு.

தென்னாப்பிரிக்காவில தன்னோட பவுலிங்காலயும், டான்ஸாலயும் பேரு வங்கினவர் ஸ்ரீசாந்த். அந்த தொடருக்கு அப்புறம் ஒன்னும் சொல்லிக்கற மாதிரி பந்துவீசலை. Batting, Bowling, Fielding மாதிரி Sledgingம் கிரிக்கெட்ல புகழ்பெற்றது. பொதுவா இந்திய வீரர்கள் அவ்வளவா ஸ்லெட்ஜிங்குக்கு ரியாக்ட் பண்ணமாட்டாங்க. ஆனா ஆந்த்ரே நெல் ஒரு பந்து வீசி இவர் தடுமாறுனதும் ஒரு முறை முறைச்சாரு. ஸ்ரீசாந்த் அடுத்த பந்தை சிக்ஸ் அடிச்சிட்டு சரியான ஒரு ஆட்டம் போட்டாரு. அவரோட அந்த எதிர்ப்பை காட்டுர அந்த Attitude வரவேற்கவேண்டிய ஒன்னு. அதே வெறிய பந்துவீச்சுறதுலயும் காட்டுனா நல்லது. தென்னாப்பிரிக்கவுல விக்கெட் எடுத்த மாதிரி, நெறைய விக்கெட் எடுக்கனும்னு தேவையில்லாத முயற்சிகள் பண்ணதால தன்னால மறுபடியும் ஜொலிக்க முடியலை. இனிமே தேவையில்லாத முயற்சிகள் பண்றத விட்டுட்டு Line and Lengthல கவனம் செலுத்தப்போறேன்னு சமீபத்தில ஒரு பேட்டில சொல்லியிருந்தாரு. அதுமாதிரி தேவையில்லாத பரிட்சைகள் செய்யறத விட்டுட்டு பவுலிங்ல கவனம் செலுத்துனா அவருக்கும், அணிக்கும் நல்லது.

கடைசியா முனாஃப் படேல். இவரு நல்லா பந்து வீசுறதா (Line and Length) எனக்கு தோனுது. அமைதியான கட்டுப்பாடான ரன்-அப், நல்ல உயரம் எல்லாம் இவருக்கு ப்ளஸ் பாயிந்த். இவருக்கும் அவ்வலவு அனுபவமிலாதது ஒரு குறை. இதுவரைக்கும் 17 போட்டிகள்ல விளையாடி 22 விக்கெட் தான் எடுத்திருகாரு. இருந்தாலும் இவருக்கு நல்ல எதிகாலம் இருக்குனு நினைக்கிறேன். இந்த உலகக்கோப்பைல தன்னோட முழு திறமையையும் காட்டுவார்னு நம்பலாம். பதான், ஜாகிர்,அகர்கர்,ஸ்ரீசாந்த் மற்றும் முனாஃப்னு நெறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கறதால அணியில இடம்பிடிக்க போராடவேண்டி இருக்கும். மேற்கிந்திய மைதானங்கள் ஸ்ரீசாந்த விட இவருக்கு சூட் ஆகும்னு நினைக்கிறேன்.

இந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங்கை விட பவுலிங் சுமாரா தான் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் அனுபவம் வாய்ந்தவர்கள் ஃபார்மில் இல்லாம இருக்கரதும், நல்ல வீசரவங்க அனுபமில்லாம் இருக்கறதும் தான். அதே மாதிரி இன்ன்னொரு குறை திறமையான் 5வது பவுலர் இல்லாதது. முன்னமே சொன்ன மாதிரி சச்சின்,ஷேவாக்,கங்கூலி, யுவராஜ்னு எல்லாரும் இருந்தாலும் அவங்க போடற 10 ஓவர்ல 60 ரன் போச்சுன்னா பெரிய பின்னடைவா இருக்கும், சமீபத்தில நடந்த இலங்கை தொடரிலயும் அதுதான் நடந்தது. ஐந்து முழுநேர பவுலர்கள் அணியில சேர்த்தா பேட்டிங் பலவீனமாகும். பதானுக்கு பேட்டிங் பயிற்சி தந்து ஆல்-ரவுண்டராக்குறது நல்ல தீர்வு.

அடுத்த பலவீனம் தடுப்பாட்டம். மத்த அணிகளோட ஒப்பிடும் பொழுது இந்திய அணியின் தடுப்பாட்டம் சுமார் தான். ஃபீல்டிங்ல குடுக்கர ஒவ்வொரு ரன்னும், விடற ஒவ்வொரு கேட்சும் மட்டையாளர்களுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் அதிக பளுவை கொடுக்கும். இந்திய அவசரகதியில சரி பண்ண வேண்டிய ஒன்னு ஃபீல்டிங். இந்தியால சொல்லிக்ற மாதிரி ஃபீல்டிங் பண்ற ஒரே ஆளு யுவராஜ் தான். கார்த்திக் பரவாயில்லை. மத்தவங்க இம்ப்ரூவ் பண்ணனும். அதேமாதிரி கீப்பிங்க்ல டோனியும் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணனும். இலங்கைக்கு எதிரான தொடரில் பிடிக்கவேண்டிய ரெண்டு மூனு கேட்ச்களை தவறவிட்டார். அவரோட பேட்டிங் அணிக்கு பலம்னாலும், கீப்பிங்கையும் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணா வெற்றி நிச்சயம் தான்.

ரொம்ப நீளமான பதிவுன்னு நினைக்கிறேன். "போதும்..இத்தோட நிறுத்திக்குவோம்"னு யாராவது சொல்றதுக்கு முன்ன நானே நிறுத்திக்கறேன்.

முதல் சுற்றில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு - அடுத்த பகுதியில்.



உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.


5 comments:

சிவபாலன் said...

பவுலிங் பற்றி நல்லா அலசியிருக்கீங்க..

பவுலிங்கிற்கு தனியாக ஒரு கோச் வைத்தால் ஓரளவு நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.

மணிகண்டன் said...

//பவுலிங்கிற்கு தனியாக ஒரு கோச் வைத்தால் ஓரளவு நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.
//

நல்ல யோசனை சிவபாலன். பல அணிகள் அதுமாதிரி பவுலிங்கிற்கு தனியா கோச் வச்சிருக்காங்க. நம்ம அணியும் கபில்தேவ் மாதிரி பெரிய ஆளு யாரையாவது கோச்சா போட்டிருக்கலாம். முன்ன கொஞ்ச நாள் இதுமாதிரி தனியா பவுலிங் கோச் இருந்ததா ஞாபகம். சரியா தெரியலை.

மணிகண்டன் said...

//ஸ்ரீசாந்த் மத்த இந்திய பவுலர்களை விட நெறைய விக்கெட்களை எடுப்பார்னு நினைக்கிறேன் //

எடுத்தா சந்தோஷம் தான். எப்படியோ இந்தியா ஜெயிச்சா சரி :)

கப்பி | Kappi said...

நல்ல அலசல் மணிகண்டன்.

மணிகண்டன் said...

//நல்ல அலசல் மணிகண்டன்//

வாங்க கப்பி. நன்றி.