Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

Wednesday, March 21, 2007

சூப்பர் 8க்கு செல்ல வழி


இன்னைக்கு நடந்த மேட்சுல இலங்கை 318 ரன் அடிச்சு பங்களாதேஷை பொளந்து கட்டிட்டாங்க .இன்னைக்கும் தீபாவளி கொண்டாடலாம்னு ஆசையோட இருந்த பங்களாதேஷுக்கு பொங்கல் குடுத்துட்டாங்க. எப்படி எல்லாம் ஆடக்கூடாதுன்னு நாம புரிய வச்சோம், எப்படியெல்லாம் ஆடனும்னு இன்னைக்கு இலங்கை புரியவச்சிட்டாங்க. எந்த பவுலரையும் செட்டில் ஆகவே விடலை. பவுண்டரியோ சிக்ஸோ அடிக்க முடியாத நேரங்கள்ல ஒன்னு,ரெண்டுன்னு எடுத்து தொய்வில்லாம ஆடினாங்க. பவுலர்களும் நல்லா பந்து வீசி பங்களாதெஷை 112 ரன்னுக்கு சுருட்டிட்டாங்க.Good Work Srilanka!

இந்த மேட்சை பத்தி அதிகமா பேசறதை விட்டுட்டு அடுத்து நாம் என்ன பண்ணா அடுத்த சுற்றுக்கு போக முடியும்னு பார்க்கலாம்.

இன்றைய நிலவரப்படி நம்ம க்ரூப்ல இருக்கற அணிகளோட புள்ளிகள் மற்றும் நெட் ரன்ரேட்.







CountryMatchesWonLostNo ResultPointsNRR
Srilanka220044.594
India211022.507
Bangladesh21102-2.002
Bermuda22000-5.0



இப்போதைய நிலவரப்படி நாம வெள்ளிக்கிழமை இலங்கைய வெற்றி பெற்றாலே போதும். ரன்ரேட் பத்தி அவ்வளவா கவலைப்பட வேண்டாம். எப்படின்னா உதாரணத்துக்கு இந்தியா 250 ரன் அடிச்சு இலங்கைய 240 ரன்னுக்கு அவுட்டாக்குதுன்னு வச்சுக்குவோம்.அப்போ இந்தியாவோட ரன்ரேட் 1.75 கிட்ட இருக்கும். இதேதான் இந்தியா 300 ரன் அடிச்சு, இலங்கையை 290க்கு அவுட்டாக்கினாலும், 200 ரன் அடிச்சு அவங்களை 190க்கு அவுட்டாக்கின்னாலும். 250 ரன் இலக்கை, இந்தியா இரண்டாவதா ஆடி 49 ஓவர்ல அடிச்சா கூட இந்தியாவோட ரன்ரேட் 1.7 கிட்ட இருக்கும். அப்போ இலங்கையோட ரன்ரேட் 2.94 இருக்கும்.

பெர்முடாவொட போட்டில பங்களாதேஷ், இந்தியாவோட ரன்ரேட்டை விட அதிகம் எடுக்க என்ன பண்ணனும்னு பார்க்கலாம்.

பங்களாதேஷ் முதல்ல ஆடி 300 ரன் எடுத்து, பெர்முடாவை 0 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கினா கூட அவங்க ரன்ரேட் 0.7 கிட்ட தான் இருக்கும். அதேமாதிரி பெர்முடா முதல்ல ஆடி 50 ரன் அடிச்சு, பங்களாதேஷ் அதை 2 ஓவர்ல அடிச்சா கூட ரன்ரேட் 0.3 தான் இருக்கும். ஆக ரன்ரேட் மூலமா பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு வர வாய்ப்பே இல்லை.

மக்கா வெள்ளிக்கிழமை ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு வாங்கப்பா ! ! புலம்ப வச்சுடாதீங்க

வெள்ளிக்கிழமை மழை வருமா வராதான்னு தெரிந்து கொள்ள

Monday, March 19, 2007

பாதிக் கிணறு தாண்டியாச்சு !



இன்னைக்கு பெர்முடாவை தோற்கடிச்சு பாதிக்கிணறு தாண்டி இருக்கு இந்தியா. ஆனா மீதி பாதியை தாண்டறது தான் கஷ்டமான விஷயம். அதையும் தாண்டலைன்னா வெளியேறவேண்டியது தான்.






பெர்முடாவுக்கு எதிரா 413 ரன் அடிச்சு உலகக்கோப்பையில சாதனை பண்ணியிருக்கு இந்தியா. இதுவரைக்கும் உலகக்கோப்பைல கென்யாவுக்கு எதிரா இலங்கை அடிச்ச 398 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோரா இருந்தது. இன்னைக்கு அதை முறியடிச்சுது இந்தியா. அதே மாதிரி ஒரு இன்னிங்ஸ்ல 18 ஸிக்ஸ் அடிச்ச தென்னாப்பிரிக்காவோட சாதனையையும் சமன் செஞ்சிருக்கு. அதே போல் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைச்சிருக்கு. இதெல்லாம் பெர்முடாவுக்கு எதிராதான்னாலும், நம்ம அணியினருக்கு நல்ல கான்ஃபிடன்ஸ் தந்திருக்கும் இந்த வெற்றி.






ஷேவாக் இன்னைக்கு சதமடிச்சாலும், இலங்கையின் தரமான பந்து வீச்சுக்கு எதிரா தாக்குப்பிடிப்பாரான்னு தெரியலை. அதே மாதிரி இந்தியாவோட பவுலிங் மற்றும் ஃபீல்டிங் இன்னமும் முன்னேறனும். பெர்முடா கிட்டே ஒப்பேத்தின மாதிரி இலங்கை கிட்ட பண்ண முடியாது. என்னைக்கேட்டா அடுத்த போட்டில அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வரலாம். மூனு விக்கெட் எடுத்திருந்தாலும் அவ்வளவு சிறப்பா அவர் பந்து வீசின மாதிரி தெரியலை. பதான் பேட்டிங்கும் கொஞ்சம் பண்ணுவாரு. அதனால் அடுத்த போட்டிக்கு என்னோட சாய்ஸ் பதான்.








சரி, இனி மீதி கினறு தாண்ட என்ன பண்ணனும்னு பார்க்கலாமா?



இன்று பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சற்று ஆறுதல் தந்துள்ளது இந்தியா. இன்றைய நிலவரப்படி இலங்கையின் நெட் ரன்ரேட் 4.86, இந்தியா 2.5, பங்களாதேஷ் 0.14. மூன்று அணிகளும் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

சாத்தியக்கூறு - 1
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கை பங்களாதேஷை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் இந்தியா இலங்கையை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்த புள்ளிகள் நான்காகும். இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் பெர்முடாவை வெல்லும் பட்சத்தில் அதுவும் நான்கு புள்ளிகள் பெற்றிருக்க்கும். இந்நிலையில் மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் இருப்பதால் சிறந்த நெட் ரன்ரேட் உள்ள முதலிரு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். இதன்படி இந்தியா அடுத்த போட்டியில் வெல்வதுடன், சிறந்த ரன்ரேட் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் இலங்கை 250 ரன்கள் அடித்து பங்களாதேஷை 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால், இலங்கையின் நெட்ரன்ரேட் 2.93 ஆக இருக்கும். இலங்கை 300 ரன்கள் அடித்து பங்களாதேஷ் 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால் 3.43 ஆக இருக்கும். இந்நிலையில் இந்தியா இலங்கையை குறைந்தது 100 ரன்கள் அல்லது 15 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் வெள்ளியன்றே அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இல்லையேல் ஞாயிறன்று நடைபெரும் பங்களாதேஷ்-பெர்முடா போட்டியின் முடிவு தெரியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

சாத்தியக்கூறு - 2
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ் வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். இந்நிலையில் பங்களாதெஷ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி . இந்தியா இலங்கை இரு அணிகளும்
மோதும் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 3
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளும் ஒரு புள்ளி பெற்று மொத்தம் மூன்று புள்ளிகளாகும்.இந்நிலையில் இந்தியா இலங்கை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 4
இலங்கை பங்களாதேஷையும் இந்தியாவையும் வெல்லும் பட்சத்தில், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றால், மீண்டும் நெட் ரன்ரேட் மூலம் இந்தியா அல்லது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Friday, March 2, 2007

வெல்லுமா இப்படை - 3 ???


முதலிரண்டு பகுதிகளுக்கான தொடுப்பு

பகுதி 1

பகுதி 2



சேமியா,பால்,முந்திரி, திராட்சை, சர்க்கரைன்னு எல்லாம் இருந்தாலும் சரியான நேரத்துல சரியான விகிதத்துல கலந்தா தான் நல்ல பாயாசம் கிடைக்கும் :). அதுமாதிரி நம்ம அணில இருக்கற ஒவ்வொருத்தரும் தனிப்பட்ட முறையில பல சாதனைகள் பண்ணியிருந்தாலும் இதுவரைக்கும் இந்தியா ஜெயிச்சத விட தோத்த மேட்சுங்க தான் அதிகம். இதுவரைக்கும் இந்தியா 643 ஒருநாள் போட்டிகள்ல விளையாடி 303 போட்டில தான் ஜெயிச்சிருக்கு.வெற்றி விகிதம் 47.12% தான். இதுவே ஆஸ்திரேலியா 60.96%மும் தென்னாப்பிரிக்கா 61.46% ஜெயிச்சிருக்காங்க. இதுக்கு காரணம் Team Work. சச்சின் மாதிரியோ,கங்கூலி மாதிரியோ திராவிட் மாதிரியோ சாதனை பண்ணவங்க இந்த அணிகள்ல இல்லை. இருந்தும் இவங்க தொடர்ந்து ஜெயிக்க காரணம் ஒரு குழுவா விளையாடறது, தன்னம்பிக்கை மற்றும் ஈடுபாடு. இதெல்ல்லாம் நம்ம அணில இல்லைனு சொல்ல வரலை. கம்மின்னு சொல்றேன். மத்த எந்த அணியை விடவும் நம்ம அணில தான் 45 வந்ததும் இல்லன்னா 90 வந்ததும் மெதுவா தட்டி தட்டி ஆடறவங்க அதிகம். இது யாராலும் மறுக்க முடியாத ஒன்னு. இப்போ இது கொஞ்சம் குறைஞ்சிடுச்சுனாலும் இன்னும் இருக்கு.

அடுத்தது தேவையில்லாத Mind Block. இந்த அணிய ஜெயிக்கறது கஷ்டம், இந்த பவுலரை அடிக்கறது கஷ்டம்னு தேவையில்லாத எண்ணங்களையும் பயத்தையும் வளர்த்துக்கறது. ஒவ்வொருத்தரும் அவங்க இயல்பான் ஆட்டத்தை ஆடுனாலெ போதும்.உதாரணமா 4வது ஒருநாள் போட்டில 4 விக்கெட் விழுந்து இலங்கை தடுமாறுன பொழுதும், சமர சில்வா தன்னோட இயல்பான ஆட்டத்தை ஆடி அணிய நல்ல நிலைமைக்கு கொண்டு போனார். ஐயோ 4 விக்கெட் போயிடுச்சே, அடுத்த 15 ஓவார்க்கு தட்டி தட்டி ஆடி விக்கெட்ட காப்பாத்தலாம்னு இருந்தா, விக்கெட் இருக்கும் ரன் இருக்காது. ஒரேயடியான டிஃவென்ஸிவ் போக்கும், ஒரேயடியான அஃவென்ஸிவ் போக்கும் ஆபத்து. இயல்பான ஆட்டம் தான் கைகொடுக்கும். மறுபடியும் இதெல்லாம் நம்ம அணில இல்லனு சொல்லலை. கம்மின்னு சொல்றேன்.மனோரீதியான நம்பிக்கை அவசியம். ஜெயிக்கனும்கற வெறி வேணும்.

அடுத்து பவுலிங்கை பற்றி பார்க்கலாம்.





இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்கள் கும்ப்ளே,ஹர்பஜன் சிங்,பதான்,ஜாகிர் கான்,அகர்கர்,ஸ்ரீசாந்த் மற்றும் முனாஃப் படேல்.

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள இந்தியர் அனில் கும்ப்ளே. அனுபவம் இவரது பலம். மேலும் மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள Slow Pitches இவரது பவுலிங்குக்கு உதவுமா என்பது சந்தேகமே. சுழற்பந்து வீச்சாளராக அடையாளம் காணப்பட்டாலும் இவர் வீசும் பந்துகள் மிதவேகமானவை. 1993-2000 வரை உச்சத்திலிருந்தவர் இவர். கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வந்தாலும் இந்த 7 ஆண்டுகளில் இவர் 259 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 61 போட்டிகளில் மட்டுமே விளையாடி 61 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது கவலைக்குரிய விஷயம். உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு முன் மீண்டும் சிறப்பாக விளையாடி அணிக்கு கோப்பையை பெற்றுதருவாரா என்பது சந்தேகமே. தொடர்ந்த இடைவெளி மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் மைதானங்கள் இவருக்கு எதிராக அமையக்கூடும்.

அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் இறங்குமுகத்திலேயே உள்ளார். 3.85, 4.12, 4.16, 4.25 என இவரது எகானமி ரேட் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவது வருத்தமான விஷயம். கடந்த ஆண்டு 13 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் இவர் முழு ஃபார்மில் இல்லை என்றே தோன்றுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேற்கிந்தியத்தீவுகளின் மைதானத்தில் தங்களின் இடத்தை தக்கவைத்துக் கொள்ள கும்ப்ளேயும் சிங்கும் சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே முடியும். தனது தூஸ்ராக்களாலும் ஆஃப் ஸ்பின்னாலும் எதிரணியை சுருட்டி கோப்ப்பையை வென்று தருவாரா எனப் பார்ப்போம்.

அடுத்து பதான். சமீபத்தில காயம் காரணமா இவரும் கொஞ்ச போட்டில விளையாடலை. அப்புறம் தியோதர் போட்டில இவர் ஆடறதை பொறுத்து தான் முடிவு செய்வேம்னு சொல்லி வெங்க்சர்கார் தேவையில்லாத பரபரப்பை உண்டாக்கினாரு. இந்தியாவின் சிறப்பான ஸ்விங் பவுலர்கள்ல இவரும் ஒருத்தர். மூனாவதா களமிறங்கி ரன்களும் அடிச்சுக் கொடுத்திருக்காரு. பயிற்சியாளர் சாப்பல் இவருக்கு இன்னம் அதிகமா பேட்டிங் பயிற்சி கொடுத்து முழுநேர ஆல்-ரவுண்டரா ஆக்குனா இவருக்கும் நல்லது அணிக்கும் நல்லது.இந்தியாவோட பெரிய குறைகள்ல ஒன்னு திறமையான ஆல்-ரவுண்டர் இல்லாதது. சச்சின், கங்கூலி, ஷேவாக், யுவராஜ்னு நிறைய மட்டையாளர்கள் பந்து வீசினாலும் எல்லாரும் பகுதி-நேர பவுலர்கள் தான். அதிலும் சச்சினோட உடல்தகுதி காரணமா அவர் அதிகமா பந்து வீசுறதும் நல்லதில்லை. அதனால் பதான் நல்லா பேட்டிங் பண்ணா கார்த்திக்கை சேர்க்காம் இன்னொரு பவுலரை அணியில சேர்க்கலாம். போனவருஷம் 24 போட்டில 35 விக்கெட்டுகளை எடுத்த இவர் இந்த வருஷம் 7 போட்டில 1 விக்கெட் தான் எடுத்திருக்கர். ஃபார்ம்ல இல்லாத எல்லாரும் உலகக்கோப்பைக்கு முன்னால சரியான நேரத்துல ஆட ஆரம்பிச்சுட்டாங்க. இவர் உலகக்கோப்பைல இழந்த ஃபார்மை பிடிப்பாருன்னு நம்புவோம்.

இப்போதைக்கு நம்பிக்கை தரமாதிரி பந்து வீசரவங்கள்ல ஒருத்தர் ஜாகிர் கான். கவுண்டில விளையாடற அனுபவம் இவருக்கு நல்லா கைகொடுக்குது. இந்த அனுபவத்தை உலகக்கோப்பைக்கும் உபயோகிப்பருன்னு நம்புவோம். இந்த தடைவை வேகமா வீசுறத விட அடிக்கடி வேகத்தை கூடி குறைச்சு வீசுறதுதான் பலன் தரும். அதனால் நான் நிறைய 'Slow Ball' போடப்போறேன்னு சொல்லியிருக்காரு. இவரோட திட்டம் பலிச்சு நெறைய விக்கெட்ட அறுவடை செஞ்சா சந்தோஷம் தான். போன உலகக்கோப்பைல 18 விக்கெட் எடுத்து கலக்குனாரு. இந்த தடவை கலக்குவாரா பார்ப்போம்.

அணியின் மற்றொரு அனுபவம் வாய்ந்த பவுலர் அகர்கர். இறுதி ஓவர்கள்ல ரிவர்ஸ் ஸ்விங் பண்ணக்கூடியவர். அடிக்கடி ஸ்லோ பால் போட்டு பேட்ஸ்மேனை குழப்பறவர். தன்னோட திறமைய நல்லா உபயோகிச்சா முன்னனி பவுலரா வரக்கூடியவர். இவரோட பலவீனம் நெறைய ரன் குடுக்கறது. இவரும் எப்பவாவது பேட்டிங்ல உதவுவார். கவனிக்கவும் எப்பவாவது. நடுவுல இறங்கு முகத்துல இருந்தவர் கடந்த ரெண்டு வருஷமா நல்லா ஆடற மாதிரி தோனுது. ஆனா முன்ன சொன்ன மாதிரி இவரோட எகானமி ரேட்டும் ஏறிகிட்டே வருது. ரன் குடுக்கறத கம்மி பண்ணா நல்ல எதிர்காலம் இல்லைனா அணியிலிருந்து தூக்கப்படர ஆவத்து இருக்கு.

தென்னாப்பிரிக்காவில தன்னோட பவுலிங்காலயும், டான்ஸாலயும் பேரு வங்கினவர் ஸ்ரீசாந்த். அந்த தொடருக்கு அப்புறம் ஒன்னும் சொல்லிக்கற மாதிரி பந்துவீசலை. Batting, Bowling, Fielding மாதிரி Sledgingம் கிரிக்கெட்ல புகழ்பெற்றது. பொதுவா இந்திய வீரர்கள் அவ்வளவா ஸ்லெட்ஜிங்குக்கு ரியாக்ட் பண்ணமாட்டாங்க. ஆனா ஆந்த்ரே நெல் ஒரு பந்து வீசி இவர் தடுமாறுனதும் ஒரு முறை முறைச்சாரு. ஸ்ரீசாந்த் அடுத்த பந்தை சிக்ஸ் அடிச்சிட்டு சரியான ஒரு ஆட்டம் போட்டாரு. அவரோட அந்த எதிர்ப்பை காட்டுர அந்த Attitude வரவேற்கவேண்டிய ஒன்னு. அதே வெறிய பந்துவீச்சுறதுலயும் காட்டுனா நல்லது. தென்னாப்பிரிக்கவுல விக்கெட் எடுத்த மாதிரி, நெறைய விக்கெட் எடுக்கனும்னு தேவையில்லாத முயற்சிகள் பண்ணதால தன்னால மறுபடியும் ஜொலிக்க முடியலை. இனிமே தேவையில்லாத முயற்சிகள் பண்றத விட்டுட்டு Line and Lengthல கவனம் செலுத்தப்போறேன்னு சமீபத்தில ஒரு பேட்டில சொல்லியிருந்தாரு. அதுமாதிரி தேவையில்லாத பரிட்சைகள் செய்யறத விட்டுட்டு பவுலிங்ல கவனம் செலுத்துனா அவருக்கும், அணிக்கும் நல்லது.

கடைசியா முனாஃப் படேல். இவரு நல்லா பந்து வீசுறதா (Line and Length) எனக்கு தோனுது. அமைதியான கட்டுப்பாடான ரன்-அப், நல்ல உயரம் எல்லாம் இவருக்கு ப்ளஸ் பாயிந்த். இவருக்கும் அவ்வலவு அனுபவமிலாதது ஒரு குறை. இதுவரைக்கும் 17 போட்டிகள்ல விளையாடி 22 விக்கெட் தான் எடுத்திருகாரு. இருந்தாலும் இவருக்கு நல்ல எதிகாலம் இருக்குனு நினைக்கிறேன். இந்த உலகக்கோப்பைல தன்னோட முழு திறமையையும் காட்டுவார்னு நம்பலாம். பதான், ஜாகிர்,அகர்கர்,ஸ்ரீசாந்த் மற்றும் முனாஃப்னு நெறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கறதால அணியில இடம்பிடிக்க போராடவேண்டி இருக்கும். மேற்கிந்திய மைதானங்கள் ஸ்ரீசாந்த விட இவருக்கு சூட் ஆகும்னு நினைக்கிறேன்.

இந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங்கை விட பவுலிங் சுமாரா தான் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் அனுபவம் வாய்ந்தவர்கள் ஃபார்மில் இல்லாம இருக்கரதும், நல்ல வீசரவங்க அனுபமில்லாம் இருக்கறதும் தான். அதே மாதிரி இன்ன்னொரு குறை திறமையான் 5வது பவுலர் இல்லாதது. முன்னமே சொன்ன மாதிரி சச்சின்,ஷேவாக்,கங்கூலி, யுவராஜ்னு எல்லாரும் இருந்தாலும் அவங்க போடற 10 ஓவர்ல 60 ரன் போச்சுன்னா பெரிய பின்னடைவா இருக்கும், சமீபத்தில நடந்த இலங்கை தொடரிலயும் அதுதான் நடந்தது. ஐந்து முழுநேர பவுலர்கள் அணியில சேர்த்தா பேட்டிங் பலவீனமாகும். பதானுக்கு பேட்டிங் பயிற்சி தந்து ஆல்-ரவுண்டராக்குறது நல்ல தீர்வு.

அடுத்த பலவீனம் தடுப்பாட்டம். மத்த அணிகளோட ஒப்பிடும் பொழுது இந்திய அணியின் தடுப்பாட்டம் சுமார் தான். ஃபீல்டிங்ல குடுக்கர ஒவ்வொரு ரன்னும், விடற ஒவ்வொரு கேட்சும் மட்டையாளர்களுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் அதிக பளுவை கொடுக்கும். இந்திய அவசரகதியில சரி பண்ண வேண்டிய ஒன்னு ஃபீல்டிங். இந்தியால சொல்லிக்ற மாதிரி ஃபீல்டிங் பண்ற ஒரே ஆளு யுவராஜ் தான். கார்த்திக் பரவாயில்லை. மத்தவங்க இம்ப்ரூவ் பண்ணனும். அதேமாதிரி கீப்பிங்க்ல டோனியும் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணனும். இலங்கைக்கு எதிரான தொடரில் பிடிக்கவேண்டிய ரெண்டு மூனு கேட்ச்களை தவறவிட்டார். அவரோட பேட்டிங் அணிக்கு பலம்னாலும், கீப்பிங்கையும் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணா வெற்றி நிச்சயம் தான்.

ரொம்ப நீளமான பதிவுன்னு நினைக்கிறேன். "போதும்..இத்தோட நிறுத்திக்குவோம்"னு யாராவது சொல்றதுக்கு முன்ன நானே நிறுத்திக்கறேன்.

முதல் சுற்றில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு - அடுத்த பகுதியில்.



உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.


Thursday, March 1, 2007

வெல்லுமா இப்படை - 2 ???




இந்திய அணி பற்றிய ஒரு அலசல்..

முதல் பகுதிக்கான தொடுப்பு இங்கே

அடுத்து யுவராஜ் சிங்.இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும் மற்றொருவர் யுவராஜ். இவரும் கைஃபும் சேர்ந்து நேட்வெஸ்ட் கோப்பையோட இறுதி ஆட்டத்தில இங்கிலாந்துக்கு எதிரா அபாரமா ஆடி கோப்பைய வாங்கிக்குடுத்தது மறக்கமுடியாத ஒன்னு. அந்த போட்டில கங்கூலி சட்டைய சுழற்றி கொண்டாடுனதும் மறக்க முடியாதது. கடந்த ஒரு மாசமா காயம் காரணமா ஆடலைனாலும், இலங்கைக்கு எதிரான கடைசி போட்டில பிரமாதமா ஆடுனாரு. உலகக்கோப்பைக்கு போற நேரத்துல இப்படி எல்லாரும் ஃபார்ம்ல இருக்கறது சந்தோஷமான விஷயம். ஆனா இந்திய மைதானங்களும், மேற்கிந்திய மைதானங்களும் முற்றிலும் வேறானவை. இந்தியால முக்கால்வாசி மைதானங்கள் பேட்ஸ்மெனுக்கு சாதகமா இருக்கும். ஆனா மேற்கிந்தியதீவுகள்ல அப்படி இல்லை. முக்கால்வாசி Slow Pitches தான். பந்து சரியா பேட்டுக்கு வராது. பொறுமையும் திறமையும் மட்டுமே கைகொடுக்கும். அந்த ரெண்டுமே இவர்கிட்ட இருக்கு. தொடக்க ஆட்டக்காரர்கள் 15 ஓவர்ல 80, 90 ரன் எடுதாலும், அதை தொடர்ந்து அணியோட ஸ்கோரை 280, 300 னு கொண்டு போற பொறுப்பு திராவிட், யுவராஜ், டோனி மாதிரி மிடில் ஆர்டர் கைல தான் இருக்கு. யுவராஜ் கரை சேர்ப்பாரா இல்ல நட்டாத்துல கவுப்பாரா? கரைசேர்ப்பாருன்னு நம்புவோம்.

அடுத்து இந்திய அணியின் லேட்டஸ்ட் சென்சேஷன் டோனி. விக்கெட்-கீப்பர் மற்றும் பேட்ஸ்மெனான இவர் இலங்கய புரட்டி புரட்டி அடிச்ச 183 ரன்ன யாரும் மறந்திருக்க முடியாது. எந்த புத்தகத்துலயும் இல்லாத புதுமாதிரி ஷாட்ஸ் ஆடறதுல பேர்போனவரு. குறிப்பா 'ஹெலிகாப்டர்' ஷாட்னு சொல்லப்படற மட்டைய ஏடாகூடமான கோணத்துல சுத்தி இவர் அடிக்கற அழகே தனி. போன உலகக்கோப்பைல திராவிட்டே விக்கெட் கீப்பிங் பண்ணதால போட்டிக்கு ஏத்த மாதிரி ஒரு அதிகப்படியான பேட்ஸ்மெனையோ பவுலரையோ அணியில சேர்த்துக்க முடிஞ்சது. ஆனா இந்த தடவை சிறந்த பேட்ஸ்மெனான டோனி கீப்பராவும் இருக்கறதால பேட்டிங் இன்னும் வலுவாகுது. மூனாவது வீரரா களமிறங்கி இவர் நிரைய ரன் அடிச்சிருந்தாலும், இப்போதைக்கு ஆறாவதாகவோ ஏழாவதாகவோ இறங்குறது இந்தியா ஸ்லாக் ஓவர்ஸுனு சொல்லப்படற 40-50 ஓவர்கள்ல நெறைய ரன் அடிக்க உதவியாயிருக்கும். கடந்த 2 வருடங்களில் மொத்தமா ஒவ்வொரு அணியும் கடைசி பத்து ஓவர்கள்ல அடிச்ச ரன்கள் பட்டியல்ல இந்தியா 3வது இடத்துல இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் டோனிங்கறது என்னோட கருத்து.

உத்தப்பா. இந்திய அணியின் புது தொடக்க ஆட்டக்காரர். கங்கூலி-டெண்டுல்கர்க்கு அப்புறம் பலவித சோதனை பண்ணியும் இன்னும் ஒரு நிலையான தொடக்க ஜோடி அமையலன்னு தான் சொல்லனும். இப்போ சமீபமா உத்தப்பா தொடக்க ஆட்டக்காரரா விளையாட ஆரம்பிசிருகாரு. இவரோட பலம் இவர் புதுசுங்கரதால எதிரணியினருக்கு இவரை பத்தி அவ்வளவா தெரியாதது. அதுவுமில்லாம இவர்மேல நிறையா எதிர்பார்ப்புகளோ பாரங்களோ இல்லாதது. அதாவது அணியில நிறைய பேட்ஸ்மென் இருக்கறதால இவர் பொறுமையா நின்னு விளையாட வேணாம். இவர்கிட்ட எல்லாரும் எதிர்பார்க்கறது (அட்லீஸ்ட் நான்) போயி ஒரு காட்டு காட்டி 20 பந்துல நாப்பதோ அம்பதோ அடிச்சுட்டு பெவிலியன்ல ஹாயா ரெஸ்ட் எடுக்கலாம். இவர் எவ்வளவு வேகமா ரன் அடிச்சுத் தராறோ அவ்வளவு நன்மை இந்தியாவுக்கு. இதுதான் இவர்பற்றிய என்னோட கருத்து. மக்கள்ஸ் நீங்க என்ன நினைக்கிறிங்கனு தெரியல. இப்போ அடுத்த பிரச்சனை யார தொடக்க ஆட்டக்காரர்களா இறக்கறதுன்னு. கங்கூலி-உத்தப்பாவா, உத்தப்பா-ஷேவாகா, கங்கூலி-ஷேவகா? என்னொட சாய்ஸ் கங்கூலி-உத்தப்பா. எப்பவுமே ஒரு லெஃப்ட்-ரைட் காம்பினேஷன் பந்து வீச்சாளர்களுக்கு கஷ்டம் தான். அதுவுமில்லாம கங்கூலியும் ஷேவாகும் ஒரு 20 25 ஓவர் ஆடினாங்கன்னா, அடுத்து வர உத்தப்பாவுக்கு அடிச்சு ஆடரது கஷ்டம். இவர் கொஞ்சம் புதுசுங்கறதாலயும் இவரோட 'Game Style'லாலயும் சர்வதேச அளவுல பொறுமையா நின்னு விளையாடறது சந்தேகம்தான். அதனால இவரோட திறமையா சரியா பயன்படுத்த இவர முதல்ல ஆடவிடறதுதான் சரி.

அடுத்து தினேஷ் கார்த்திக். புதுவரவான இவரும் நல்ல திறமையான் ஆளுதான். ஆனா இன்னும் தன் திறமைய முழுசா காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கல. இலங்கைக்கு எதிரான கடைசி போட்டில இவர மூனாவதா இறக்கி டெஸ்ட் பண்ணாங்க. எனக்கென்னவோ இவர் ஏழாவதா வர்ரது தான் சரினும் தோனுது. அதுவுமில்லாம இவர கூடுதல் விக்கெட்-கீப்பரா வச்சிருக்காங்க.இதுவரைக்கும் 13 போட்டில விளையாடி 18.75 என்ற சராசரியோட 150 ரன்கள் அடிச்சிருக்காரு. சமீபத்துல மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரா அடிச்ச 63 ரன்கள் தான் இவரோட அதிகபட்ச ஸ்கோர். திறமையானவர்னாலும் வெறும் 13 போட்டில ஆடினத வச்சு எதுவும் சொல்றது கஷ்டம். இவரை பத்தி அதிகமா அப்புறம் பந்துவீச்சாளர்களை பத்தி அலசும்பொழுது பார்ப்போம்.

மீதி அடுத்த பதிவில்...

உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.

வெல்லுமா இப்படை - 1 ???


இப்படை தோற்கின் எப்படை வெல்லும், சென்று வருக வென்று வருக, GOOD LUCK INDIAன்னு எல்லாரும் விதவிதமா வாழ்த்தி நம்ம பசங்களை வழியனுப்பி வச்சுட்டோம். நம்ம பசங்க கோப்பையோட வருவாங்களா இல்ல வெறுங்கையோட வருவாங்களானு பார்ப்போம்.

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம், முந்தைய கோப்பைகளில் இந்தியாவின் வெற்றிகள், இந்த கோப்பைல இந்தியாவோட வெற்றி வாய்ப்புனு பலதையும் அலசவே இப்பதிவு. 4 இல்ல 5 பகுதியா வரும்.

முதல் பகுதில இந்திய அணியோட பலம் மற்றும் பலவீனத்தை பார்க்கலாம். இது முழுக்க, முழுக்க என்னோட கருத்து. இதுல எதிர்கருத்து இருக்கறவங்க தாராளமா பின்னூட்டத்தில துப்பிட்டு போங்க. எதையும் தாங்கும் இதயமும் முகமும் எங்கிட்ட இருக்கு :))


இப்போன்னு இல்லாம பலகாலமா (குறிப்பா சச்சின் காலத்துல இருந்து) இந்தியாவோட பலம் பேட்டிங் தான். அதுவும் இந்த தடவை உலகக்கோப்பை போற அணியில பேட்டிங்க் வரிசை ரொம்ப பலமா இருக்கு. சச்சின்,திராவிட்,கங்கூலி, யுவராஜ் சிங்,டோனி, ஷேவாக், உத்தப்பா,கார்த்திக்னு வரிசையா ஆட்டக்காரர்கள்.

சச்சின் கடந்த உலகக்கோப்பைகள் மாதிரி இந்த தடவையும் கலக்கினார்னா இந்தியாவுக்கு யானை பலம். ஆனா இவரோட ஃபிட்னஸ் தான் அப்பப்ப கால வாரி விடுது.அதுவுமில்லாம கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் விளையாடின தளர்ச்சியும் தெரியுது. இதுதான் இவர் ஆடர கடைசி உலகக்கோப்பையா இருக்கும். இன்னமும் இவர மட்டும் நம்பாம மத்தவங்களும் கொஞ்சம் பாரத்தை சுமந்தா நல்லாயிருக்கும். சமீபகால போட்டிகள்ல இவர் சீக்கிரம் அவுட்டாகியும் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், இவர் அவுட்டான உடனே அவ்வளவு தாண்டா இந்தியா, எல்லாரும் வரிசையா அவுட்டாகப் போறங்கன்னு எல்லாரோட(இல்லன்ன என் மனசில) மனசிலயும் தோணறது நெஜம். எல்லாராலயும் பாரட்டப்பெற்றவர், 10 பதிவு போட்டாலும் எழுதமுடியாத அளவுக்கு சாதனைகள் செஞ்சவர், தன் கிரிக்கெட் வாழ்க்கைல இந்தியா உலகக்கோப்பையை ஜெயிக்கறத பார்க்காம போனா மிகவும் வருந்தவேண்டிய விஷயம். அதுக்காகவாவது இவர் இந்த தடவை நமக்கு உலகக்கோப்பையை வாங்கித் தருவாருன்னு நம்புவோம். COME ON,SACHIN.

இவருக்கு அடுத்து 'தாதா'கங்கூலி. எனக்கு மிகவும் பிடித்தவர்கள்ல ஒருத்தர். விடாமுயற்சி, நம்பிக்கை வெற்றி தரும்னு ரெண்டு தடவை நிருபிச்சவரு. முதல்முதலா ஆஸ்திரேலியாவுக்கு எதிரா 1991ல் ஒரெஒரு ஒருநாள் போட்டில விளையாடினாரு. அதுக்கப்புறம் தேர்வுக்குழுவோட வழக்கமான கூத்தால கழட்டி விடப்பட்டார். அதுக்கப்புரம் 1996-97 இந்கிலாந்துக்கு எதிரா மறுபடியும் விளையாடி முதல் டெஸ்ட்லய 100 அடிச்சு அணியில நிரந்தரமா இடம்பிடிச்சாரு. திரும்பவும் அக்டோபர் 2005ல மோசமான பேட்டிங் காரணமா நீக்கப்பட்டாரு. இப்போ மறுபடியும் லோக்கல் போட்டிகள்ல தன் திறமைய நிருபிச்சு அணிக்குள்ள வந்தாரு. இலங்கக்கு எதிரான தொடரில ஆட்டநாயகன் விருதையும் வாங்கி அசத்துனாரு. இப்போ இருக்கற ஃபார்ம் உலகக்கோப்பைலயும் தொடர்ந்தா நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. முன்னமாதிரி விலகிப்போற பந்தை அடிக்க முயற்சிக்காம, கொஞ்சம் பொறுமையா கட்டுப்பாட்டோட ஆடர மாதிரி தோனுது. இந்த தடவை இவர் கண்டிப்பா நல்ல ஆடுவாரு, ஆடனும், ஏன்னா திரும்ப அணிக்குள்ள வரது நடக்காத காரியம். நீளம் குறைவா தோளளவுக்கு எழும்பி வர பந்துகள் தான் இந்தியா பேட்ஸ்மென்களுக்கு எப்பவுமே எதிரி. அதுபோன்ற பந்துகலையும் சிறப்பா ஆட பயிற்சி எடுத்துகிட்டாருன்னா ஏப்ரல் 29ம் தேதி 'இந்தியா உலகக்கோப்பையை வென்றது'னு பதிவ போட்டுடலாம்.

அடுத்து வருவது நம்ம 'WALL' திராவிட். உலகளவுல டெக்னிகலி சிறந்த பேட்ஸ்மென்கள்ல இவர் ஒருத்தர். கங்கூலியும் இவரும் ஒன்னா அறிமுகமானங்க. ரெண்டு பேரும் கலக்கிட்டு இருக்காங்க. ஒருநாள் போட்டிக்கெல்லாம் இவரு லாயக்கில்லை, டெஸ்டுக்கு தான் சரின்னும் பலரும் சொன்னப்ப அதை உடைச்சு தன்னால் ஒருநாள் போட்டிலயும் சாதிக்க முடியும்னு நிருபிச்சாரு. இவர் மிடில் ஆர்டர்ல ஆடறது அணிக்கு ஒரு ஸ்திரத்தன்மைய தரும். முதல் 15 ஓவர் அடிச்சு ஆடனப்புரம் பொறுமையா அதே சமயம் சரியான அளவு ரன்களும் சேகரிக்க இவர் மாதிரி ஆளுங்க தேவை. தேவைப்பட்டா அடிச்சும் ஆடறது இவரோட பெரிய பலம். கடந்த தொடரில 10,000 ரன்னை கடந்து சாதனை பண்ணாரு. உலகளவுல 10,000 ரன்கள் அடிச்ச ஆறு பேரில மூனு பேர்(சச்சின், கங்கூலி, திராவிட்) நம்ம அணில இருக்கறதே நம்ம அணியோட பேட்டிங் திறமைக்கு சாட்சி. இருந்தாலும் எல்லாரும் ஒரு அணியா சேர்ந்து விளையாடினால் தான் வெற்றிபெற முடியுங்கறதுக்கும் நம்ம அணியே சாட்சி :)).

ஏனோ அடிக்கடி சித்து வர்ணனைல சொன்னதா எங்கேயோ படிச்சது ஞாபகத்துக்கு வருது. இந்திய அணி சைக்கிள் ஸ்டாண்ட் மாதிரி.ஒரு சைக்கிள் விழுந்தா வரிசையா எல்லா சைக்கிளும் விழுந்துடும். அந்த மாதிரி நெறைய தடவை நடந்தும் இருக்கு.அந்த மாதிரி இல்லாம எல்லாரும் ஒரு 30 இல்ல 40 அடிச்சாலே போதும். மீதிய பவுலர்கள் பாத்துக்குவாங்க.

அடுத்து ஷேவாக். ஆரம்ப காலங்கள்ல தன்னோட அதிரடி ஆட்டத்தால சச்சின் அளவுக்கு பரபரப்பா பேசப்பட்டவர். அதிரடி மட்டும் பத்தாது கொஞ்சம் புத்திசாலித்தனமும் வேணும்னு கொஞ்ச நாள்ல புரிஞ்சிகிட்டாரு. சச்சினும், கங்கூலியும், திராவிட்டும் நல்லா ஆடும் பட்சத்துல இவர் அதிரடியா ஆடினாலெ போதும். இவரும் உத்தப்பாவும் சேர்ந்து 15 ஓவர்ல ஒரு 90 இல்ல 100 ரன் அடிச்சுக் குடுத்தாங்கன்னா அணிக்கு பெரிய பலமா இருக்கும். சமீபகாலமா இவர் ஃபார்மில இல்லாதது கவலையான விஷயம். அனுபவமிக்கவர், தடபுடானு ஒரு 20 பந்துல 40 ரன் அடிச்சாலும் உபயோகமா இருக்கும் போன்ற காரணங்களால இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன். செய்வாரா ஷேவாக் ??

பதிவோட நீளம் கருதி மீதி அடுத்த பாகத்துல..

உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.

பி.கு. கேக்காம படத்தை சுட்டதுக்கு சிவபாலன் மன்னிக்கவும்