Showing posts with label முதல்சுற்று. Show all posts
Showing posts with label முதல்சுற்று. Show all posts

Thursday, March 15, 2007

கடுப்படிக்கும் முதல் சுற்று போட்டிகள் :(


நெஜமாவே இந்த முதல் சுற்று போட்டிகள் தேவை தானானு தோனுது. போறவர அணிகளையெல்லாம் புடிச்சு போட்டு முதல் சுற்றை ஒரு சுவாரசியமே இல்லாம பண்ணிட்டாங்களோனு தோனுது. எப்படியும் (99.99%) எட்டு பெரிய அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாக்கிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்த சுற்றுக்கு போகப்போகுது. எதாவது ஒன்னு ரெண்டு போட்டிகள்ல சிறு அணிகள் ஜெயிச்சாலும், அடுத்த சுற்றுக்கு போறது கஷ்டம் தான்.




எந்த முறையும் இல்லாம் இந்த முறை ஐசிசி மினோஸ்னு சொல்லப்படும் 8 பலம் குறந்த அணிகளை சேர்த்திருக்கு. பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்றவர்கள் (தாற்காலிகமாக ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் விளயாடுவதை நிறுத்தி வைத்துள்ளது) . அதுவுமில்லாம சிலமுறை பெரிய அணிகளையும் தோற்கடிச்சிருக்காங்க. கென்யாவும் அதே மாதிரி சில ஆச்சரியங்களை நிகழ்த்தி இருக்காங்க. போன முறை நடந்த சில குளறுபடிகளால அரை-இறுதி வரைக்கும் வந்தாங்க. அவங்களை கணக்கில சேர்க்காம பார்த்தா மீதி இருக்க ஐந்து அணிகளான கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, பெர்முடா, ஸ்காட்லாந்து ஆகியவை சும்மா ஒப்புக்கு சப்பாணியா சேர்க்கப்பட்ட மாதிரியே தெரியுது.

பங்களாதேஷும், கென்யாவும் மட்டும் தான் பெரிய அணி எதையாவது தோற்கடிச்சு ஆச்சரியத்தை தரக்கூடிய மாதிரி இருக்காங்க. மத்த அணி எதுவும் அவ்வளவு திறமை வாய்ந்ததா தெரியல. ஃப்ளவர் பிரதர்ஸ், கேம்ப்பெல், ஸ்ட்ரீக், ப்ராண்டிஸ், நீல் ஜான்சன்னு ஒருகாலத்துல நல்ல நிலைமைல இருந்த ஜிம்பாப்வே அணியும் இப்போ உள்நாட்டு பிரச்சனைகள்,சம்பளப் பிரச்சனை போன்ற காரணங்களால பலவீனமா இருக்கு. இவங்களால பெரிய அணி எதையும் தோற்கடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

இவ்வளவு பலம் குறைந்த அணிகள சேர்த்துக்கு காரணமா ஐசிசி சொல்றது அந்த நாட்டுல கிரிக்கெட்ட வளர்க்கனும், அவங்களுக்கும் பெரிய நாடுகளோட விளையாடற அனுபவம் கிடைக்கனும். இது நல்ல காரணம்னாலும், அதுக்காக இவ்வளவு அணிகளுக்கு வாய்ப்புதரனுமாங்கறது தான் கேள்வி. தற்பொழுது ODI Status இல்லாத நாடுகளுக்கு நடத்தப்படும் ஐசிசி ட்ராஃபில முதல் அஞ்சு இடத்தை பிடிக்கற அணிகளுக்கு உலகக்கோப்பைல ஆடுற வாய்ப்பும் அடுத்த ஐசிசி ட்ராஃபி வரைக்கும் ODI Status-ம் தரப்படுது. அதுக்கு பதிலா முதல் இரண்டு இடத்தை பிடிக்கற அணிகளுக்கு மட்டும் உலககோப்பைல வாய்ப்பு வழங்கலாம். முதல் ஐந்து அணிகளுக்கு ODI Status மட்டும் கொடுக்கலாம். அதோட டெஸ்ட் போட்டி தகுதி இருக்கற பத்து அணிகளும்,கென்யாவும் வருஷத்துக்கு ஒருதடவையாவது இந்த ஐந்து அணிகள்ல எதாவது ஒரு அணியோட ஒருநாள் போட்டித்தொடர் கண்டிப்பா விளையாடனும்னு சொல்லலாம். இதனால் அந்த அணிகளுக்கு பெரிய அணிகளோட விளையாடற அனுபவமும் கிடைக்கும், அவங்க நாட்டுல கிரிக்கெட் பிரபலமும் அடையும்.

இதோட இன்னொரு சிறப்பு என்னன்னா உலகக்கோப்பை மாதிரி ஒரு பெரிய போட்டில தேவையில்லாத கூட்டம் குறையும். இந்த மாதிரி அணிகள் ஆடறதால் 300 ரன் அடிக்கறது சாதாரனமா ஆயிடுச்சு. இதுவரைக்கும் உலகக்கோப்பைல 30 முறை 300 ரன்களுக்கு மேல அடிக்கப்பட்டிருக்கு. அதுல 21 முறை இது மாதிரி சிறு அணிகளுக்கு எதிரா அடிச்சதுதான்.இது நேத்து ஆஸ்திரேலியா அடிச்ச 334யும் இன்று இலங்கை அடிச்ச 321யும் சேர்க்காம. இதனால போட்டிகளுக்கு வர கூட்டமும் குறைஞ்சிடுச்சு. ஆளே இல்லாத ஸ்டேடியத்துல போட்டி நடத்தி என்னத்தையா கிரிக்கெட்ட வளர்க்க போறீங்க??

1975ல முதல் உலகக்கோப்பைல பார்த்திங்கன்னா இலங்கையும், கிழக்கு ஆப்பிரிகாவும் மட்டுமே இந்த மாதிரி சேர்க்கப்பட்டது. 1979ல இலங்கயும் கனடாவும். 1983ன் பொழுது இலங்கைக்கு 1981லயே டெஸ்ட் ஸ்டேட்டஸ் கிடைச்சதால் ஜிம்பாப்வே மட்டும் கூடுதலா சேர்க்கப்பட்டது. இந்த மூனு உலகக்கோப்பைலயும் 8 நாடுகள் தான் ஆடுனாங்க. 1987 உலகக்கோப்பைலயும் இதே நாடுகள் தான். 1992 உலகக்கோப்பைல தென்னாப்பிரிக்கா முதல்முறையா கலந்துகிட்டாங்க. ஜிம்பாப்வே டெஸ்ட் ஸ்டேட்டஸ் கிடைச்சதால் கலந்துகிட்டாங்க. முதல் தடவையா 8க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட உலகக்கோப்பை அதுதான்.

1996ல இருந்து தான் கூட்டம் சேர்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ கென்யா, நெதர்லாந்து மற்றும் UAE ஆகிய அணிகளோட சேர்த்து 12 ஆச்சு. 1999லயும் 12 அணிகள், 2003ல 14 அணிகள். அப்போ நிறைய அணிகள் இருந்தாலும் முதல் சுற்றுல இரண்டு குழுக்களாகவே பிரிக்கப்பட்டிருந்தது. அதனால் ஒன்னு ரெண்டு போட்டிகள் சொத்தையா இருந்தாலும், மத்த போட்டிகள் சுவாரசியமா இருந்தது. இந்த தடவை 16 அணிகள சேர்த்து அதையும் நாலு குழுவா பிரிச்சிட்டாங்க. ஒவ்வொரு குழுவுலயும் ரெண்டு சொத்தை அணிகள். அதுலயும் இந்தியாவுக்கு லக் இல்லை. கொஞ்சம் பலம் வாய்ந்த அணியான பங்களாதேஷை நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க. 17ம் தேதி வரைக்கும் நெருப்பை வயித்துல கட்டிகிட்டு இருக்கற மாதிரி ஆயிடுச்சு :) . நம்ம குழுவான் 'B'யை தான் இந்த முறை 'Group of Death'னு சொல்றாங்க.

மத்த குழுவுல எல்லாம் கண்டிப்பா ரெண்டு பெரிய அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மாதிரி தான் இருக்கு. ஐசிசியே அடுத்த சுற்றோட அட்டவணைல A1,A2,B1,B2னு போடாம அணிகளோட பேரை போட்டிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க! இதுல அடுத்த காமெடி புள்ளிகள் அடிப்படைல முதல் சுற்றுல 1,2 முடிவு பண்ணாம, தரவரிசை அடிப்படைல முடிவு பண்றது. அதனால் இந்தியா எல்லா போட்டிலயும் ஜெயிச்சா கூட B2 தான். இது என்ன லாஜிக்னு தெரியலை? அப்படியே தரவரிசை படி பார்த்தாகூட போனா உலகக்கோப்பைல இருந்து இந்த உலகக்கோப்பை வரை பார்க்கலாம். அப்படி இல்லாம ஏப்ரல் 2005ல இருந்த தரவரிசைய கணக்கில எடுத்திருக்காங்க. அப்போ தான் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதனால அந்த தேதில இருந்த தரவரிசையை கணக்குல எடுத்துகறாங்களாம்? ஐசிசிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா. போனதடவை ஃபைனல்ஸ் வரைக்கும் வந்த இந்தியா அந்த தரவரிசப்படி எட்டாவது இடம் :( .

இவ்வளவு அணிகள சேர்த்ததால உலகக்கோப்பையோட சுவாரசியமே குறஞ்சிடுச்சுன்னு நெறைய முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சொல்லியிருக்காங்க. அதே தான் நம்ம கருத்தும். அவங்களுக்கு வாய்ப்பும் அனுபவமும் தேவைதான். அதுக்கு உலகக்கோப்பையை பலிகடா ஆக்கனுமா? யோசிக்குமா ஐசிசி 2011க்குள் ?

குறிப்பு : இந்த பதிவை எழுத ஆரம்பிச்சப்ப இலங்கைக்கு எதிரா பெர்முடா பேட் செய்ய ஆரம்பிச்சாங்க. இப்போ ஸ்கோர் 17 ஓவர்ல 44/7. எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!


சிரமம் பார்க்காம நீங்களும் உங்க கருத்தை சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!