Monday, March 19, 2007

பாதிக் கிணறு தாண்டியாச்சு !



இன்னைக்கு பெர்முடாவை தோற்கடிச்சு பாதிக்கிணறு தாண்டி இருக்கு இந்தியா. ஆனா மீதி பாதியை தாண்டறது தான் கஷ்டமான விஷயம். அதையும் தாண்டலைன்னா வெளியேறவேண்டியது தான்.






பெர்முடாவுக்கு எதிரா 413 ரன் அடிச்சு உலகக்கோப்பையில சாதனை பண்ணியிருக்கு இந்தியா. இதுவரைக்கும் உலகக்கோப்பைல கென்யாவுக்கு எதிரா இலங்கை அடிச்ச 398 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோரா இருந்தது. இன்னைக்கு அதை முறியடிச்சுது இந்தியா. அதே மாதிரி ஒரு இன்னிங்ஸ்ல 18 ஸிக்ஸ் அடிச்ச தென்னாப்பிரிக்காவோட சாதனையையும் சமன் செஞ்சிருக்கு. அதே போல் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைச்சிருக்கு. இதெல்லாம் பெர்முடாவுக்கு எதிராதான்னாலும், நம்ம அணியினருக்கு நல்ல கான்ஃபிடன்ஸ் தந்திருக்கும் இந்த வெற்றி.






ஷேவாக் இன்னைக்கு சதமடிச்சாலும், இலங்கையின் தரமான பந்து வீச்சுக்கு எதிரா தாக்குப்பிடிப்பாரான்னு தெரியலை. அதே மாதிரி இந்தியாவோட பவுலிங் மற்றும் ஃபீல்டிங் இன்னமும் முன்னேறனும். பெர்முடா கிட்டே ஒப்பேத்தின மாதிரி இலங்கை கிட்ட பண்ண முடியாது. என்னைக்கேட்டா அடுத்த போட்டில அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வரலாம். மூனு விக்கெட் எடுத்திருந்தாலும் அவ்வளவு சிறப்பா அவர் பந்து வீசின மாதிரி தெரியலை. பதான் பேட்டிங்கும் கொஞ்சம் பண்ணுவாரு. அதனால் அடுத்த போட்டிக்கு என்னோட சாய்ஸ் பதான்.








சரி, இனி மீதி கினறு தாண்ட என்ன பண்ணனும்னு பார்க்கலாமா?



இன்று பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சற்று ஆறுதல் தந்துள்ளது இந்தியா. இன்றைய நிலவரப்படி இலங்கையின் நெட் ரன்ரேட் 4.86, இந்தியா 2.5, பங்களாதேஷ் 0.14. மூன்று அணிகளும் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

சாத்தியக்கூறு - 1
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கை பங்களாதேஷை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் இந்தியா இலங்கையை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்த புள்ளிகள் நான்காகும். இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் பெர்முடாவை வெல்லும் பட்சத்தில் அதுவும் நான்கு புள்ளிகள் பெற்றிருக்க்கும். இந்நிலையில் மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் இருப்பதால் சிறந்த நெட் ரன்ரேட் உள்ள முதலிரு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். இதன்படி இந்தியா அடுத்த போட்டியில் வெல்வதுடன், சிறந்த ரன்ரேட் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் இலங்கை 250 ரன்கள் அடித்து பங்களாதேஷை 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால், இலங்கையின் நெட்ரன்ரேட் 2.93 ஆக இருக்கும். இலங்கை 300 ரன்கள் அடித்து பங்களாதேஷ் 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால் 3.43 ஆக இருக்கும். இந்நிலையில் இந்தியா இலங்கையை குறைந்தது 100 ரன்கள் அல்லது 15 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் வெள்ளியன்றே அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இல்லையேல் ஞாயிறன்று நடைபெரும் பங்களாதேஷ்-பெர்முடா போட்டியின் முடிவு தெரியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

சாத்தியக்கூறு - 2
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ் வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். இந்நிலையில் பங்களாதெஷ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி . இந்தியா இலங்கை இரு அணிகளும்
மோதும் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 3
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளும் ஒரு புள்ளி பெற்று மொத்தம் மூன்று புள்ளிகளாகும்.இந்நிலையில் இந்தியா இலங்கை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 4
இலங்கை பங்களாதேஷையும் இந்தியாவையும் வெல்லும் பட்சத்தில், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றால், மீண்டும் நெட் ரன்ரேட் மூலம் இந்தியா அல்லது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.